சிறுமியாக இருந்தபோது பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு அதனால் பிறந்த மகனாலேயே 28 வருடங்களுக்குப் பிறகு அப்பெண்ணுக்கு நீதி கிடைத்த நெகிழ்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாஜகான்பூரின் சர்தார் பஜார் பகுதியை சேர்ந்த பெண், கடந்த 1994ம் ஆண்டு அவரது 12 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். உறவினர் வீட்டில் வசித்து வந்த அந்த சிறுமியை, வீட்டில் தனியாக இருக்கும் சமயத்தில் முகமது ரஜி என்ற குட்டு ஹாசன் மற்றும் நாக்கி ஹாசன் என்ற இரு சகோதரர்கள் பலமுறை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் கர்ப்பமடைந்து சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
சிறுமிக்கு குழந்தை பிறந்ததும், அதனை உங்கள் வீட்டில் வைத்து வளர்க்கக் கூடாது என்றும் இதுகுறித்து போலீசுக்கு சொல்லக்கூடாது எனவும் முகமது ரஜி மிரட்டல் விடுத்துள்ளார். இதற்குப் பயந்து, அந்த சிறுமியின் குடும்பத்தினர் விஷயத்தை மூடி மறைத்தனர். இதையடுத்து வேறொரு உறவினர் வீட்டில் அந்த குழந்தையை வளர்க்கச் செய்தனர்.
அதே சமயம், சிறுமிக்கு கடந்த 2000ம் ஆண்டில் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணமான சில மாதங்களில், சிறு வயதில் அந்த பெண் வன்புணர்வு செய்யப்பட்டதை அறிந்த அவரது கணவர் வீட்டை விட்டு துரத்திவிட்டார். இதனால், அந்த பெண் தனியாக வாழ்ந்துள்ளார். ஆண்டுகள் ஓடிய நிலையில், அந்த பெண்ணுக்கு பிறந்த மகன் வளர்ந்து, 26 வயதில் தனது தாயை தேடி வந்தார். அவரிடம் தனது தந்தை குறித்து விசாரித்த போது, பாலியல் வன்புணர்வு சம்பவத்தை கூறி அதிர வைத்துள்ளார்.
தாய்க்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்கச் செய்ய முடிவு செய்த மகன், இதுதொடர்பாக ஷாஜகான்பூர் காவல் நிலையத்தல் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியாக இருந்த போது அந்த தாயை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படும் முகமது ரஜி மற்றும் நாக்கி ஹாசன் ஆகிய இருவரையும் விசாரித்தனர். ஆனால் அவர்கள் இருவரும் அப்படி ஒரு பெண்ணை வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை என கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மரபணு சோதனை நடந்தது. அதில், முகமது ரஜி பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை என்பது மருத்துவரீதியாக உறுதி செய்யப்பட்டது. டிஎன்ஏ பரிசோதனை மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமியாக இருந்தபோது பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டவருக்கு பிறந்த மகனால், 28 ஆண்டுகளுக்கு பின் அப்பெண்ணுக்கு நீதி கிடைத்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: வித்தியாசமான திரவப் பொருளால் புதுப்பெண் எரித்துக் கொலை?..திருமணமான 4 மாதங்களில் அதிர்ச்சி!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM