`கலப்பு திருமணம் செய்ததற்காக ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதா?’ – நீதிமன்றத்தில் கிடைத்த நீதி!

புதுக்கோட்டை, பொன்னமராவதி நல்லூர் கிராமத்தில் கலப்புத் திருமணம் செய்த 25 குடும்பங்களிடமிருந்து தலைக்கட்டு வரி வசூல் செய்யவும், திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்க கோரியும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த வேலு என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் குறிப்பிட்ட சமூகத்தை (பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் ஒரு பிரிவு) சேர்ந்தவர்கள். நல்லூர் கிராமத்தின் தலைவர்களாக (அதே சமூகத்தை சேர்ந்த) பிச்சன், சொக்கலிங்கம், பெருமாள் ஆகியோர் உள்ளனர்.
image
நான் மாற்று (பிற்படுத்தப்பட்ட) சமூகத்தை சேர்ந்த பெண்ணான ஜெயலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். தற்போது எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இது போல் எங்கள் கிராமத்தில் 25க்கும் மேற்பட்டவர்கள் கலப்புத் திருமணம் செய்துள்ளோம். இதனால், இந்த ஊர் தலைவர்கள் மற்றும் மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளோம்.
எங்கள் ஊரில் உள்ள நல்லூர் பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா கொண்டாடுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு குடும்பத்திலும் தலைக்கட்டு வரி வசூல் செய்யப்பட்டு திருவிழா கொண்டாடப்படும். ஆனால், கலப்புத் திருமணம் செய்த 25 குடும்பங்களிடம் “தலைக்கட்டு வரி” தொகையை பெற மறுத்து விட்டனர். மேலும் கோவில் திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுத்துவிட்டனர்.
image
எனவே, கலப்புத் திருமணம் செய்த 25 குடும்பங்களிடமிருந்து தலைக்கட்டு வரி வசூல் செய்யவும், திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “கலப்பு திருமணம் செய்ததால் வருடம் வருடம் நடைபெறும் பங்குனி கோவில் திருவிழாவில் அனுமதி மறுக்கின்றனர்” என தெரிவிக்கப்பட்டது.
image
இதனை விசாரித்த நீதிபதி, பொன்னமராவதி தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தி கலப்புத் திருமணம் செய்த 25 குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் தலைக்கட்டு வரி வசூல் செய்து, திருவிழாவில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.