கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் தொடந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் ஒற்றை யானையை விரட்ட வேண்டுமென பொதுமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் பாரதி அண்ணா நகர், பேத்துப்பாறை, அஞ்சு வீடு உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன.
மலைப்பகுதியில் வன விலங்குகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளது. மேலும், வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் இந்த யானை, காட்டெருமை, பன்றி உள்ளிட்ட விலங்குகள் தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதனால் விவசாயிகள் பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைகின்றனர். பொதுமக்கள் மீதும் வனவிலங்குகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. எனவே விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுயானை உள்ளிட்ட வன விலங்குகளை நிரந்தரமாக விரட்ட வேண்டுமென வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.