ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றின் கழிமுகப் பகுதியில் கிடைக்கக் கூடிய அரிய வகை மீன் தான் `புலாசா மீன்’. ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் மட்டுமே இந்த மீன் அப்பகுதியில் கிடைக்கும் என்பதால், இந்த மீனைப் போட்டிப் போட்டுக் கொண்டு அதிக விலையிலும் மக்கள் வாங்குவதுண்டு. காரணம் இந்த மீனை சமைத்து சாப்பிடுவதை கௌரவமாக நினைக்கிறார்கள் ஆந்திர மக்கள். இதை வாங்கி மற்றவர்களுக்கு பரிசு அளிக்கும் வழக்கமும் இங்குண்டு. அந்தளவுக்கு ஆந்திர மக்களின் வாழ்வோடு இரண்டற கலந்தது.
உடல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்ததாகக் கருதப்படும் புலாசா, இதய நோய், புற்று நோய் உள்ளிட்ட பலவித நோய்களின் பிரச்னைகளை தீர்ப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே ‘தாலியை விற்றாவது புலாசா மீனை வாங்கி தின்று விடு’ (`புஸ்டேலு ஆமினா புலாசா தின்னிலி’) என்ற ஆந்திர பழமொழி ஒன்று உண்டு.
இந்நிலையில் கோதாவரி ஆற்றிலிருந்து பிரியும் ஆறு ஒன்றில் இளைஞர் ஒருவர் வலை வீசி மீன் பிடிக்கையில், அவரது வலையில் எதிர்பாராத விதமாக சுமார் 2 கிலோ எடையுள்ள புலாசா மீன் கிடைத்துள்ளது. அந்த இளைஞரிடமிருந்து பார்வதி என்ற மீன் வியாபாரி ஒருவர் 19,000 செலுத்தி அந்த மீனை வாங்கியுள்ளார்.
அந்த மீனை மார்க்கெட்டில் வியாபாரத்திற்கு வைத்த போது, ஏராளமானவர்கள் புலாசா மீனைப் போட்டிப் போட்டுக் கொண்டு விலை பேசினர். 25,000 ரூபாய் என மீனுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதியாக 20,000 ரூபாய்க்கு அந்த மீன் விற்கப்பட்டது.