நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான சோனாலி போகத் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டநிலையில், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதாக அறிக்கை வந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குழப்பத்தை விளைவித்துள்ளது.
1. அரியானா மாநிலம் பாட்டேஹாபாத் மாவட்டம் பூத்தன் காலன் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனாலி போகத். 42 வயதான இவர், 8 ஆண்டுகளுக்கு முன் தூர்தர்சனில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜீ டி.வி.யின் தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். மாடலாகவும் இருந்துள்ளார். மேலும் வெப் தொடரிலும் நடித்துள்ளார். 2020-ம் ஆண்டிற்கான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். அத்துடன் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர்.
2. பா.ஜ.க.வில் மகளிர் அணி முன்னாள் தேசிய துணைத் தலைவர், தேசிய செயல் குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தவர். 2019-ம் ஆண்டு நடந்த அரியானா சட்டசபை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.
3. இந்நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்ற சோனாலி போகத், சாப்பிட்டப் பின் அசௌகரிமாக உணர்ந்தநிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சோனாலி போகத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சோனாலி போகத்தின் திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
4. இந்த அதிர்ச்சி மறைவதற்குள் சோனாலி போகத்தின் குடும்பத்தினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். சோனாலி மரணமடைவதற்கு ஒருமணிநேரத்திற்கு முன்பு தன்னுடைய தாயாருக்கு போன் செய்து, ‘எனக்கு எதிராக ஏதோ சதி நடக்கிறது. சாப்பிட்ட பிறகு அசௌகரியமாக உணர்கிறேன்’ என்று பேசியதாக சோனாலியின் சகோதரி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இதனை கோவா போலீசார் மறுத்திருந்தனர்.
5. இதனைத் தொடர்ந்து, சோனாலி போகத்தின் சகோதரர் ரிங்கு டாக்காவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். சோனாலி போகத் தனது மறைவுக்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்பு, தனது தாயார், சகோதரி மற்றும் சகோதரியின் கணவருடன் ஃபோனில் பேசினார். அப்போது, “உதவியாளர் சுதிர் சங்வான் போதை மருந்து கலந்த உணவை தனக்கு கொடுத்து விட்டார். பின்பு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மிரட்டுகிறார். அதனை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி விடுவேன் என்றும் அச்சுறுத்துகிறார். எனது அரசியல் மற்றும் நடிப்பு தொழிலை அழித்து விடுவேன் என சுதிர் சங்வான் மிரட்டுகிறார். எனது செல்ஃபோன்கள், சொத்து பதிவுகள், ஏ.டி.எம். அட்டைகள் மற்றும் வீட்டு சாவிகளையும் பறித்து வைத்து உள்ளார்” என்று சோனாலி போகத் தெரிவித்ததாக அவரது சகோதரர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில், கோவா காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
6. இதற்கிடையே கோவா வந்த சோனாலி போகத்தின் குடும்பத்தினர் ஒப்புதலுடன் உடற்கூராய்வு பரிசோதனை நடைபெற்றது. இந்த ஆய்வில் தான், தற்போது சோனாலி போகத்தின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்தநிலையில், தற்போது கொலை வழக்காக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
7. அத்துடன் சோனாலி போகத்தின் உதவியாளர்களான சுதீர் சங்வான், சுக்வீந்தர் வாசி ஆகிய இருவரின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர்களிடம் போலீசார் தற்போது விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுபற்றி காவல்துறை ஐஜி ஓம்வீர் சிங் பிஷ்னோய் பேசுகையில், “சோனாலியின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் அஞ்சுனா போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுதிர் சங்வான், சுக்விந்தர் ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது” என்று தெரிவித்தார்.
8. இந்நிலையில், சோனாலி போகத்தின் உடற்கூராய்வு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் உடற்கூராய்வு பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாகவும், பாஜகவுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சோனாலி போகத்தின் இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்களில் ஒருவர் கூட உதவிக்குவரவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.