ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சவீதா மருத்துவமனையில் முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த சிறுமி தான்யாவுக்கு தமிழக முதல்வரின் உத்தரவின் படி முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்களின் அறிவுரைப்படி சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுமியை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சிறுமி தான்யாவின் தொகுதியான மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் சிறுமியின் பெற்றோர்களிடம் நலம் விசாரித்து ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி அளித்தார். பின்னர் மருத்துவர்களிடம் சிறுமி குறித்து கேட்டறிந்தார். தன்னுடைய தொகுதியின் சார்பில் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் பெற்றோரிடம் அவர் தெரிவித்தார்.
இதனை அடுத்து நிதி உதவி அளித்த சட்டமன்ற உறுப்பினருக்கும் தன்னுடைய குழந்தையை காப்பாற்றிய தமிழக முதலமைச்சருக்கும் கண்ணீர் மல்க பெற்றோர் நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து தான்யாவின் தாய் சௌபாக்கியா கூறியதாவது, முதலமைச்சரை சந்திக்க எனது மகளும்ம் நாங்களும் ஆர்வமுடன் உள்ளோம்…
தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் தான் இருக்க வேண்டும் என்றும் அவர் தான் தங்கள் குடும்பத்தின் குலசாமி என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.