70வது பிறந்தநாளை கொண்டாடிய விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் ‛கேப்டன்' என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். எந்த பின்புலமும் இன்றி சினிமாவில் சாதித்தவர். 1978ல் 'இனிக்கும் இளமை' படத்தில் சிறு வேடத்தில் நடித்து சினிமாவில் தனது பயணத்தை துவக்கிய விஜயராஜ் எனும் விஜயகாந்த் அதன்பின் 'தூரத்து இடிமுழக்கம்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ‛சட்டம் ஒரு இருட்டறை' என்ற படத்தில் நாயகனாக களமிறங்கிய இவர் அதன்பின் ‛‛வைதேகி காத்திருந்தாள், ஊமை விழிகள், நானே ராஜா நானே மந்திரி, கரிமேட்டு கருவாயன், அம்மன் கோயில் கிழக்காலே, பூந்தோட்டக் காவல்காரன், கேப்டன் பிரபாகரன், மாநகர காவல், சேதுபதி ஐபிஎஸ், சின்ன கவுண்டர், வானத்தை போல'' உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சினிமாவில் நிலையான இடத்தை பிடித்தார்.

சுமார் 35 வருடங்கள் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் இவர் 2005ம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி மதுரையில் 'தேசிய முற்போக்கு திராவிட கழகம்' என்ற பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தையும் துவக்கினார். எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்து அளவுக்கு அரசியலில் உயர்ந்தார் விஜயகாந்த்.

கடந்த சில ஆண்டுகளால் உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த் தற்போது நலமாக உள்ளார். இன்று(ஆக.,25) தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சென்னையில் தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்த், பிறகு தனது தேமுதிக., அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார்.

விஜயகாந்த்திற்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி, பா.ஜ. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளானர். மேலும் நடிகர் சங்கம் சார்பில் கார்த்தி நேரில் வந்து விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து சென்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.