பெலகாவி:பெலகாவி கோல்ப் மைதானத்தில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க, இரண்டு யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் பெலகாவி நகரின், கோல்ப் மைதானத்தில் 20 நாட்களாக சிறுத்தை நடமாடுகிறது. பல இடங்களில் கூண்டுகள் வைத்தனர். இதுவரை சிக்கவில்லை. குடியிருப்பு பகுதிகளிலேயே, சிறுத்தை நடமாடுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
‘தேவையின்றி வெளி யே நடமாட வேண்டாம். குழந்தைகளை வெளியே விளையாட விட வேண்டாம்’ என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.கேமரா பொருத்தியும், ட்ரோன் உதவியுடனும் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. இதுவரை சிக்காததால், வளர்ப்பு யானைகள் அழைத்து வரப்படும் என, வனத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இதன்படி ஷிவமொகாவின், சக்ரிபைலு முகாமிலிருந்து அர்ஜுன், 20, அலி, 14, ஆகிய இரண்டு யானைகள், பெலகாவி நகரை வந்தடைந்தன.சிறுத்தை நடமாடிய கோல்ப் மைதான வளாகத்தில், இரண்டு யானைகளும் கட்டப்பட்டுள்ளன. இந்த இரண்டு யானைகளும், முரட்டு யானைகளை சிறை பிடிப்பதில் திறன் பெற்றவை. ஆனால், சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்துவது, இதுவே முதன் முறையாகும்.
பெலகாவி நகர மக்களும் கூட, இத்தகைய நடவடிக்கையை பார்ப்பது முதல் முறையாகும். யானைகளுடன் தலா ஒரு பாகன், உதவியாளர், மயக்க ஊசி போடும் மருத்துவர் உட்பட, எட்டு பேர் வந்துள்ளனர். சிறுத்தையை தேடும் படலம் துவங்கியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement