பாஜக பிரமுகரை கொல்ல முயற்சி.. கைதாகி ஜாமினில் வந்த காங்கிரஸ் கவுன்சிலருக்கு பாலாபிஷேகம்..

போபால்: மத்திய பிரதேசத்தில் மாநகராட்சி தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக பிரமுகரை கொலை செய்ய முயன்று சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்த காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலருக்கு அவரது ஆதரவாளர்கள் பாலாபிஷேகம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குற்றம் செய்பவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். அவர்கள் ஜாமீன் அல்லது தண்டனை காலம் முடிந்து வெளியே வரும்போது ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுப்பது அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தும்.

அந்த வகையில் தான் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக பிரமுகரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் சிறை சென்று திரும்பிய காங்கிரஸ் வேட்பாளருக்கு மேளதாளத்துடன் மாலை அணிவித்து ஆதரவாளர்கள் மரியாதை செய்து ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

மாநகராட்சி தேர்தல்

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் தேர்தல் நடந்தது. இதில் 22வது வார்டில் காங்கிரஸ் கட்சியின் ராஜூ பதோரியா போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜகவை சேர்ந்த சந்துராவ் ஷிண்டே களமிறங்கினார். இந்த வார்டில் இவர்கள் 2 பேருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

கொலை செய்ய முயற்சி

கொலை செய்ய முயற்சி

இதையடுத்து ஏற்பட்ட தகராறில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜூ பதோரியா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் சந்துராவ் ஷிண்டேவை சரமாரியாக தாக்கினார். இதனால் பயந்துபோன அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். காங்கிரஸ் கட்சியின் ராஜூ பதோரியாவை கைது செய்தனர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமீனில் விடுதலை

ஜாமீனில் விடுதலை

இதற்கிைடையே தேர்தல் முடிவு வந்தது. இதில் சிறையில் இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ராஜூ பதோரியா வெற்றி பெற்றார். இதன்மூலம் கவுன்சிலரான அவர் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த ராஜூ பதோரியாவுக்கு அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து மேளதாளத்துடன் வரவேற்றனர். வாத்தியங்கள் முழங்க அவரை சிறையில் இருந்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். மேலும் அவர் மீது பால் ஊற்றி பாலாபிஷேகம் செய்தனர்.

வெளியான வீடியோ

வெளியான வீடியோ

தற்போது இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் சிறையில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்ட 11 பேருக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. இதனை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்த நிலையில் கொலை முயற்சி வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்த காங்கிரஸ் கவுன்சிலருக்கு பாலாபிஷேகம் செய்ததை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.