ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை ராணுவம் தீவிரமாக களையெடுத்து வருவதால், அவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், தாக்குதல்கள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, தீவிரவாத அமைப்புகளின் மீது பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ கடும் கோபத்தில் இருக்கிறது. எனவே, பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் அதிகளவில் தீவிரவாதிகளை அனுப்ப முயற்சி செய்யப்படுகிறது. இந்நிலையில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரியின் கமல்கோட் எல்லை பகுதியில் நேற்று தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதை கண்ட வீரர்கள், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில். 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
போதை பொருள்: ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில், எல்லைப் பாதுகாப்பு படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சில்லியாரி என்ற இடத்தில் ஒருவர், பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஊடுருவினார். அவரை திரும்பி செல்லும்படி வீரர்கள் எச்சரித்தனர். ஆனால், அவர் தொடர்ந்து முன்னேறினார். அவர் மீது வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். காயமடைந்த அவர், தான் கொண்டு வந்த பையை போட்டு விட்டு தப்பி சென்றார். அந்த பையில் 8 கிலோ போதைப் பொருட்கள் இருந்தது. அது பறிமுதல் செய்யப்பட்டது.