மதுரை: மதுரை மாணவி வங்கி கணக்கில் பணம் எடுக்காமலேயே ரூ.6 ஆயிரம் மாயமான நிலையில் மாணவிக்கு ரூ.26 ஆயிரம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஹார்விப்பட்டியைச் சேர்ந்தவர் இந்துமதி. இவர் 2012-ல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். இவர் வைத்திருந்து ஏடிஎம் கார்டு சரியாக செயல்படாததால், பணம் எடுக்க 22.5.2012-ல் வங்கிக்கு சென்றார். பணம் எடுத்து விட்டு வங்கி கணக்கு புத்தகத்தில் பதிவு செய்தார். அப்போது 2.2.2012-ல் ஏடிஎம் மூலமாக ரூ.6000 பணம் எடுத்ததாக பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து குறிப்பிட்ட அந்த நாளில் ஏடிஎம் மூலமாக ரூ.6 ஆயிரம் எடுக்கவில்லை. ஆனால் கணக்கில் ரூ.6 ஆயிரம் கழிக்கப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என வங்கி மேலாளரிடம் இந்துமதி மனு கொடுத்தார்.
வங்கி பணத்தை திரும்ப தராததால் இந்துமதி மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் வழக்கு திண்டுக்கல் நுகர்வோர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி பிறவிபெருமாள் விசாரித்தார்.
இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “வங்கி நிர்வாகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. வங்கியின் சேவை குறைபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மனுதாரருக்கு கொடுக்க வேண்டிய ரூ.6 ஆயிரத்துடன், மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரத்தை வங்கி நிர்வாகம் 45 நாளில் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டது.