உங்கள் வாழ்க்கை சூழலில் ஒரு பொழுதேனும் மணல்மகுடி நாடகக் குழுவின் பெயரை கேட்டால், அதில் பங்கேற்காமல் விட்டு விடாதீர்கள். நீங்கள் தவறவிட கூடாத ஒரு நாடக நிகழ்ச்சி என்பதை கண்டு கேட்ட பின்பு உணர வைக்கின்றன இந்த விசித்திர புதுமொழி நாடகங்கள்.
கோவில்பட்டியை பூர்வீகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு நாடக குழு ‘மணல் மகுடி’. இதன் ஆசிரியர் முருக பூபதி. வாராவாரமோ, மாதமாதமோ அல்ல எப்போது பாமர மக்களின் குரல் ஒலிக்க முடியாமல் போகிறதோ, அவர்களின் வலி அதிகார வர்க்கத்துக்கு முறையாக தெரிவிக்கப்படாமல் நிற்கிறதோ, அந்த நேரத்தில் இந்த குழு தங்கள் நாடக மொழி வாயிலாக வெளிப்படுத்துகின்றனர். இதில் வரும் காட்சிகள் பார்ப்போரின் மனதை தொடும். சில உண்மைகள் மனதை ரணமாக்கும். அப்படி இதுவரை கண்டிராத புது வகை நாடக மொழியில் முருக பூபதியின் இந்த மணல் மகுடி நாடககுழு அரங்கேற்றி வருகிறது.
சமீபத்தில் கோவில்பட்டியில் மணல் மகுடி நாடக குழு சார்பில் அப்படி ஒரு நிகழ்வாக நடைபெற்றதுதான் ‘இடாகினி கதாயரத்தம். நாடகத்தின் பெயரை அடையாளப்படுத்துவதில் எந்த அளவிற்கு வித்தியாச முயற்சி இருக்கிறதோ, அதேபோல நாடகம் தொடங்கி முடியும் வரை இசை, ஒலி, ஒளி எனத் தொடங்கி ஒவ்வொரு பரிமாணமும் உங்களை நாடகத்திற்குள் மூழ்கடிக்கும். பொதுவெளியில் தான் இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறது. இருள் மெல்லப் பரவும் மாலை வேளையில், உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் பழங்குடிகள் பயன்படுத்திய இசைக்கருவிகள் இசைக்கப்படும். அவை உங்கள் செவிகளை ஆகச் சிறந்த ஒலிகளால் கவர்ந்து உங்களின் ரசிப்பு பரிமாணத்தை வேறொரு கோணத்தில் மாற்றி அமைக்கும்.
நாடக மேடைக்குள் ஆங்காங்கே திடீரென உதயமாகும் ஒளி பாய்ச்சல்கள், நம் உள்ளத்தை ஊடுருவும் இசை ஒலிகள், தங்கள் உடல் அசைவுகள், நடிகர்கள் பூண்டிருக்கும் வேடங்கள் மெல்ல மெல்ல நம்மை நாடக கதைக்குள் பயணிக்க வைக்கும் மந்திர உச்சாடனங்கள். இந்த நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் வசனங்கள் உச்சரிப்பதில்லை. மாறாக தங்கள் உடல் மொழி மூலம் பார்வையாளர்களின் மனதில் நாடகம் குறித்த சுய புரிதலை உருவாக்கி விடுகின்றனர். இதனால் நாடகத்திற்கான கதை பார்வையாளர்கள் மனதில் உருவாகிறது.
கொரோனா பொதுமுடக்கக் காலங்களில் உலகம் முழுவதும் நடந்த இடப்பெயர்வு, கொதிக்கும் தார்ச்சாலையில் ஆயிரமாயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற பாமர மக்கள் சந்தித்த துன்பங்கள், பிரியமானவர்களே விட்டு விலகிய வேதனைகள், உயிரிழப்பால் உருகிப்போன உறவுகள் குறித்து ‘இடாகினி கதாயரத்தம்’ நாடகம் பேசுகிறது.
மணல் மகுடி நாடக குழு உறுப்பினர் பூபாலன் நாடகம் குறித்து கூறும்போது, ”கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பாரம்பரிய சடங்குகள், இசை வடிவங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து அதிலிருந்து புதிய நாடக மொழி ஒன்றை உருவாக்கி நவீன நாடகங்களை நடத்தி வருகிறோம். இந்த நாடக குழுவின் ஆசிரியர் முருக பூபதி. இந்தியா முழுவதும் அனைத்து சர்வதேச நாடக விழாக்களிலும் பங்கேற்று உள்ளோம். குறிப்பாக டெல்லியில் தேசிய நாடகப் பள்ளியில் நடைபெறும் ‘பாரத் ரங்க் மகா உற்சவ்’ நிகழ்ச்சியில் 5 ஆண்டுகளாக தொடர்ந்து நாடகங்களை அரங்கேற்றி சாதனை படைத்துள்ளோம். உலகம் முழுவதும் பாமர மக்களின் இடப்பெயர்வு நடந்து கொண்டே இருக்கிறது. ‘இடாகினி கதாயரத்தம்’ நாடகம் பொதுமுடக்கக் காலங்களில் ஒரே நாள் இரவில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தெருவில் வீசப்பட்ட மனிதர்களைப் பற்றி பேசுகிறது. எங்கள் நாடகங்களில் கதையைச் சொல்லி நாடகம் நடத்தப்படுவதில்லை. மாறாக கதையை சொல்லும் நாடகமாகவும் இவை இருப்பதில்லை. ஆனால் இங்கே கதை என்பது கேட்கும் வாசகருக்கு மனதில் கதை உருவாகும் விதத்தில் எங்கள் நாடகம் இருக்கும்.
சமகால அரசியல் மற்றும் இயற்கை பற்றிய புரிதலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை இந்த நாடகம் செய்கிறது. இந்த நாடகம் மனிதனுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் ஆனது. எனவே இதனை புரிந்து கொண்டால் மட்டும்தான் மனிதன் வாழ முடியும். இது மனிதனை மையப்படுத்தி மனித மைய உலகாக இருக்கிறது. இதனை மாற்றி பல்லுயிர்களின் குரலாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த உலகம் ஒட்டுமொத்த உயிரினங்களுக்கான உலகமாக இருக்க வேண்டும் அதில் மனிதனும் ஒரு பங்காக இருக்க வேண்டும் இதை பேசும் வடிவமாக தான் எங்கள் நாடகம் இருக்கும்.
இதில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் அனைத்தும் பொதுவெளியில் கேட்கப்படாத இசை கருவிகளாக இருக்கும். ஏனென்றால் உலகம் முழுவதும் வாழும் பழங்குடி மக்கள் பயன்படுத்தும் ஆதி இசைக்கருவிகளை தேடிக் கண்டுபிடித்து இந்த நாடகத்திற்காக பயன்படுத்தி உள்ளோம். இந்த நாடகத்திற்காக 18 மாதங்கள் தொடர்ந்து அனைவரும் உழைத்திருக்கிறோம்.
இசைக்கருவிகள் வழியாக முகமூடிகள் வழியாக பங்கேற்பாளர்கள் உரையாடல்கள் மற்றும் காட்சிகள் வழியாக நாடகத்தை கவனித்தால் பார்வையாளர்களுக்கு மிக சிறப்பான உணர்வை எங்கள் நாடகம் தரும்” என்றார்.
இது போன்ற நாடகங்கள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடையாவிட்டாலும் ஒரு முறை இந்த நாடகத்தை பார்த்து ரசித்து விட்டால் இனிமேல் எங்கு நடந்தாலும் அதனை நாம் தவறவிடக்கூடாது என்ற மனநிலையை உருவாக்கி விடும். இந்த நாடகம் மொழி பார்க்கும் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் ஈர்த்து விடும். இந்த நாடகக் குழுவின் ஆகச் சிறந்த இந்த முயற்சி பார்வையாளர்களின் ரசனைக்கு காதுக்கும் மனதுக்குமான புதிய உணர்வு. மறுபுறம் பார்வையாளர்களின் பார்க்கும், கேட்கும் பரிணாமத்தை உயர்த்தி பிடிக்கும் ஒரு புதிய முயற்சி என்றால் அது மிகை அல்ல.
இதையும் படிக்க:Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM