புதுடெல்லி: அமெரிக்காவில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, 2 வாரங்களுக்கு பிறகு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 2 வாரங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது ஒரு நபர், கண்மூடித்தனமாக சரமாரியாக பல இடங்களில் கத்தியால் குத்தினார். இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த ருஷ்டியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ருஷ்டி மீதான தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள், அமைப்புகள், எழுத்தாளர்கள் உடனடியாக கடும் கண்டனம் தெரிவித்தனர். பாகிஸ்தான் முன்னாள் இம்ரான் கானும், சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலை கண்டித்து இருந்தார். ஆனால், இந்தியா கருத்து எதுவும் கூறாமல் இருந்தது. இது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், ஒன்றிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று அளித்த பேட்டியில், ‘இந்தியா எப்போதும் வன்முறை, தீவிரவாதத்திற்கு எதிராக நிற்கிறது. சல்மான் ருஷ்டி மீதான கொடூரமான தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்,’ என்று தெரிவித்தார்.