அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து பின்னர் மீண்டும் அரசியலில் என்ட்ரி கொடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தை சில தினங்களுக்கு முன்பாக பரபரப்பிற்கு உள்ளாக்கியவர் தமிழருவி மணியன். அரசியலில் ஓய்வு பெறுவதாக அறிவித்த பின்னர் வெளியுலகில் பெரிதாய் அவரின் கருத்துகள் வெளிவரவில்லை. இந்த நினையில் அரசியலில் முழுக்கு போட்டதை தவறாக எண்ணுகிறேன் என்று அறிவித்தார் தமிழருவி மணியன்.
காந்திய மக்கள் இயக்கம் எனும் பெயரில் இயக்கம் நடத்தி வந்த தமிழருவி மணியன் அதை இப்போது “காமராஜர் மக்கள் கட்சி” என்றும் பெயரை மாற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்பட்டது. அதற்கு பிறகு சில நிர்வாகிகளையும் தனது புதிய கட்சிக்கு நியமித்தார் தமிழருவி மணியன்.
தற்பொழுது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இது குறித்து தமிழருவி மணியன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ”7877381381 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து காமராஜர் மக்கள் கட்சியில் களப்பணி ஆற்றலாம்” என்று போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
வைகோ, ரஜினி போன்ற முக்கிய புள்ளிகளுக்கு அரசியல் ஆலோசைகளை வழங்கியவர் தமிழருவி மணியன். தற்பொழுது புதிய கட்சியையும் தோற்றுவித்துள்ளார். இவர் கட்சியில் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் நோக்கம் ஆகியவற்றை எதிர் நோக்கி வருகின்றனர் தமிழக அரசியல் ஆர்வலர்கள். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழருவி மணியனின் நிலைப்பாடு மற்றும் ஆதரவு குறித்தும் கவனித்து வருகிறது தமிழக அரசியல் வட்டாரம்.