பாட்னா: பீகார் மாநில சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு முதல்வர் நிதிஷ் குமார் விட்டுக் கொடுத்துள்ளார். பீகாரில் பாஜ உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார். அதிக எம்எல்ஏ.க்களை கொண்டுள்ள ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பதவியேற்று உள்ளார். இந்நிலையில், ஆட்சி மாற்றத்துக்கு முன்பாக சபாநாயகராக இருந்த பாஜ.வை சேர்ந்த விஜய் குமார் சின்கா நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, புதிய சபாநாயகருக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்த பதவியை ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு நிதிஷ் விட்டுக் கொடுத்துள்ளார். இதையடுத்து, இக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ அவாத் பிகாரி சவுத்ரி, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் முதல்வர் நிதிஷ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.