அரசியல் ஆதாயத்துக்காக என் பேச்சை திரித்து வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை நிதின் கட்காரி எச்சரிக்கை

புதுடெல்லி,

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, கடந்த வாரம் பா.ஜனதா ஆட்சி மன்ற குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

இதற்கிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் நிதின் கட்காரி கலந்து கொண்டார். அங்கு பேசுகையில் ஒரு பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

மராட்டிய மாநிலத்தில் ஒரு கிராமத்துக்கு சாலை அமைக்க அவர் திட்டமிட்டார்.

அதைப்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் அவர் பேசும்போது, ”என்ன பின்விளைவுகள் ஏற்பட்டாலும் இதை செய்வேன். நீங்கள் என்னுடன் இருந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் கவலைப்பட மாட்டேன்” என்று கூறியதாக அந்த நிகழ்ச்சியில் நிதின் கட்காரி பேசினார்.

ஆனால், அவரது பேச்சை ஆங்காங்கே வெட்டி, ”பதவி பறிக்கப்பட்டதற்கு கவலைப்பட மாட்டேன்” என்று அவர் பேசியது போன்ற வீடியோவை சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிட்டனர். ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங்கும் அந்த வீடியோவை பகிர்ந்து, கருத்து தெரிவித்தார்.

இந்தநிலையில், தனது பேச்சு அடங்கிய முழுமையான வீடியோவை நிதின் கட்காரி நேற்று வெளியிட்டார். அத்துடன் அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:-

சில ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் அரசியல் ஆதாயத்துக்காக எனக்கு எதிராக இழிவான, இட்டுக்கட்டிய பிரசாரம் நடக்கிறது.

எனது பேச்சை தவறாக சித்தரித்து, திரித்து வெளியிடுகிறார்கள். இதுபோன்ற அவதூறு பிரசாரத்தால் நான் பதற்றம் அடைய மாட்டேன்.

இருப்பினும், இத்தகைய தவறான பிரசாரம் நீடித்தால், எங்கள் அரசு, பா.ஜனதா மற்றும் கோடிக்கணக்கான செயல்வீரர்களின் நலனுக்காக அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.