புதுடெல்லி: டெல்லி – வாரணாசி இடையே புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்துவது பரிசீலனையில் உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி – வாரணாசி இடையே புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சமீபத்தில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில், இந்த ரயில் திட்ட பாதையில் பல குறுகலான வளைவுகள் இருப்பதால், இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை நிராகரிக்கப்பட்டதாக வெளியான தகவலை ரயில்வே அமைச்சகம் மறுத்துள்ளது. இது குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெல்லி-வாரணாசி புல்லட் ரயில் திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கையை ரயில்வே அமைச்சகம் நிராகரிக்கவில்லை. தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்த அறிக்கையை இறுதி செய்து ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை, ரயில்வே வாரியத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த திட்டத்தில் நொய்டா, ஆக்ரா, லக்னோ, பிரயாக்ராஜ் மற்றும் வாரணாசி வழியாக புல்லட் ரயில் செல்லும்,’ என்று கூறப்பட்டுள்ளது.