ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சதாசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிரிநாத்(17) என்பவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்தாண்டு நடைபெற்ற 11ம் வகுப்பு தேர்வில் 4 பாடப்பிரிவுகளில் தோல்வி அடைந்தார். இதையடுத்து, துணை தேர்வில் கலந்து கொண்டு 4 பாடப்பிரிவுகளுக்கான தேர்வினை எழுதினார். இதன் முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில், கணிதம் மற்றும் வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மீண்டும் கிரிநாத் தோல்வியடைந்தார்.
நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்தார். நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த கிரிநாத், திடீரென மயங்கி சரிந்தார். பள்ளி ஆசிரியர்கள், கிரிநாத்திடம் விசாரித்தபோது பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். உடனே அவரை மீட்டு, காட்டுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். தகவலறிந்து வந்த பெற்றோர் கிரிநாத்தை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3 மாணவிகள் தற்கொலை முயற்சி: தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவிகள் மூவர், எறும்பு பொடியை தண்ணீரில் கலந்து குடித்துள்ளனர். தகவலறிந்த தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர், மாணவிகளை மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை அமைச்சர் கீதாஜீவன், சப்-கலெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரித்தனர். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியை அளித்த புகாரின் பேரில் 3 மாணவிகள் மீது பள்ளி வளாகத்திற்குள் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.