தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் உள்ள மாணவர்களை போதை ஊசிகளுக்கு அடிமையாக்கிய திருச்சியைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேரை, போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனுாரில் இளைஞர்கள் போதை ஊசி செலுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அறிந்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், உத்தமபாளையம் இந்திரா நகர் முகமது மீரான் வயது 22, சின்னமனுார் சாமிகுளத்தைச் சேர்ந்த மாணிக்கம் வயது 19, ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், டாக்டர் பரிந்துரையின் படி பயன்படுத்தப்படும் ஊசி மருந்தை மாணவர்களுக்கு போதை ஊசியாக ‘சப்ளை’ செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, சின்னமனுார் போலீசார் முகமதுமீரான், மாணிக்கம், தங்கேஸ்வரன், சரவணக் குமார் ஆகியோரை கைது செய்து, அவர்களிமிருந்த ஊக்க மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தென் மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தெரிவித்ததாவது: திருச்சியில் பொறியியல் பட்டதாரியான ஜோனத்தன்மார்க் என்பவர் மொத்த மருந்து விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர் போதை ஊசிகளை சென்னை, ஓசூர், தேனி, கோவை, திருப்பூர், சிவகங்கை, கரூர், சேலம், திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் விற்பனை செய்து வருகிறார்.
இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த பாலுச்சாமி மகள் வினோதினி உதவியாளராக பணிபுரிந்தார். இந்நிலையில், ஜோனத்தன்மார்க் மற்றும் வினோதினியையும் கைது செய்துள்ளோம். என்று அவர் தெரிவித்தார்.