சென்னை: அரசுப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை செப்.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்எம்சி) உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி சமையலுக்கு சுத்தமான பாத்திரங்கள் பயன்படுத்தப்படுதல், காய்கறிகள், உணவுப் பொருட்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அம்சங்களை பார்வையிட்டு அதன் தரம், சுவையை பரிசோதிக்க வேண்டும். மாணவர்கள் தட்டு மற்றும் கைகளை தூய்மையாக கழுவுவதைக் கண்காணிக்க வேண்டும். உணவு பரிமாறுவதற்கும் எஸ்எம்சி உறுப்பினர்கள் உதவி செய்யலாம். சுகாதாரமான குடிநீர் வழங்குவதையும் உறுதிசெய்ய வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறப்பான முறையில் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த எஸ்எம்சி உறுப்பினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.இதுதொடர்பான அறிவுறுத்தல்களை தலைமை ஆசிரியர்கள் மூலம் குழுவினருக்கு, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த காலை சிற்றுண்டி திட்டமானது, தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1,545 தொடக்கப் பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் சுமார் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைவார்கள். அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், செப் 15-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.