பனாஜி: பாஜ மகளிரணி துணைத் தலைவரும், நடிகையுமான சோனாலி போகட்டின் பிரேத பரிசோதனையில் உடலில் பலவந்தம் செய்யப்பட்டதற்கான காயங்கள் இருப்பதாக அதில் தெரிய வந்துள்ளது. அரியானாவைச் சேர்ந்த நடிகை சோனாலி போகட், டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானார். பின்னர், இவர் பாஜ.வில் இணைந்தார். 2019ம் ஆண்டு நடந்த இம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். பாஜ.வின் மகளிரணி துணைத் தலைவராக இருந்த இவர், கடந்த வாரம் கோவாவுக்கு சுற்றுலா சென்றார்.
கடந்த செவ்வாயன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், அது பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்படியும் குடும்பத்தினர் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, சோனாலியின் சாவை சந்தேகத்துக்குரிய மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, சோனாலி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி. பிரேத பரிசோதனைக்கு சம்மதிக்க வைத்தனர். அதன்படி, நேற்று பிரேத பரிசோதனை நடந்தது. அது முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், சோனாலி உடலில் அதிகளவில் மறைமுக காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், அவர் பாலியல் பலாத்காரம் முயற்சியில் கொல்லப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அவருடைய உதவியாளர்களான சுதிர் சக்வான், சுக்விந்தர் வாசி கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது. இந்நிலையில், கோவா போலீசில் சோனாலியின் சகோதரர் ரிங்கு டாக்கா அளித்துள்ள புகாரில், ‘இறப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக எனது தாயார், சகோதரி மற்றும் சகோதரியின் கணவருடன் சோனாலி பேசினார். அப்போது, தனது உதவியாளரான சக்வான் போதை மருந்து கலந்த உணவை கொடுத்து, தன்னை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டுவதாக தெரிவித்தார். சோனாலியின் செல்போன்கள், சொத்து பத்திரங்கள், ஏடிஎம் கார்டுகளையும் அவர் பறித்து வைத்துள்ளார்,’ என கூறியுள்ளார்.