குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக மேலும் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களை அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் புகலிடங்களாக உருமாற்றி வருகின்றன என்பது உளவுத்துறை அமைப்புகளின் எச்சரிக்கை. அஸ்ஸாமில் ஆளும் பாஜக அரசும் இதனை அடிப்படையாக வைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது.
கடந்த மாதம் அஸ்ஸாமில் அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த 11 பயங்கரவாதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அஸ்ஸாம் மாநிலத்தில் வெவ்வேறு பெயர்களில் அல்கொய்தாவும் அதன் சார்பு இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன என்றனர் அம்மாநில போலீசார்.
அஸ்ஸாம் போலீஸ் கூடுதல் டிஜிபி ஹிரேன் நாத் கூறுகையில், அஸ்ஸாமின் மோரிகாவன், பார்பேட்ட மாவட்டங்களில் அல்கொய்தா இந்திய துணைக் கண்ட அமைப்பு, அன்சாருல்லா பங்களா என்ற வங்கதேச பயங்கரவாத இயக்கம் ஆகியவற்றை சேர்ந்த பயங்கரவாதிகள் பிடிபட்டனர். மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இயக்கங்களுக்கு ஆள்சேர்க்கும் நடவடிக்கைகளும் கண்டறியப்பட்டன. இது தொடர்பான பிரசுரங்களும் சிக்கின என்றார்.
அஸ்ஸாமின் கோல்பரா மாவட்டத்தில் பின்னர் 2 அல்கொய்தா பயங்கரவாதிகள் சிக்கினர். கோல்பரா மாவட்டத்தில் மசூதிகளின் இமாம்களாக இருந்த அப்துஸ் சுபான், ஜலாலுதீன் சேக் இருவருமே சிக்கிய பயங்கரவாதிகள் என அம்மாவட்ட எஸ்.பி. ராகேஷ் ரெட்டி கூறினார். இந்த 2 பேரும் ஜிஹாதிகள் எனப்படும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தனர் என்பது போலீசாரின் குற்றச்சாட்டு.
இது தொடர்பாக எஸ்.பி.ராகேஷ் ரெட்டி கூறியதாவது: ஜிஹாதிகளுடன் தொடர்பில் இருந்த அப்பாஸ் அலி என்பவர் ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அஸ்ஸாமில் பல்வேறு மாவட்டங்களில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் குறித்து பெறப்பட்டன. அதேபோல் சிக்கிய பயங்கரவாதிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதன் அடிப்படையிலும் சில தகவல்கள் பெறப்பட்டன. பயங்கரவாதிகள் பயன்படுத்திய செல்போன்கள் ஆராயப்பட்டு அதில் இருந்தும் பல எண்கள் சிக்கி உள்ளன. இதனடிப்படையில்தான் 2 இமாம்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
இந்த நிலையில் அஸ்ஸாலிம் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக மேலும் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த போலீசார், மதராசாக்களை பல்வேறு தரப்புகள் இயக்குகின்றன.வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களும் பயங்கரவாத இயக்கத்தினரும் வெவ்வேறு பெயர்களில் இளைஞர்களை மூளைச்சலவை செய்கின்றனர் என்றனர்.