சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம் விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பட்டாசு விற்பனை உரிமத்தை 5 ஆண்டுகளுக்கு வழங்க சாத்தியம் இருந்தாலும், தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 3 ஆண்டுகளுக்கான உரிமமும், இதர மாவட்டங்களில் ஓராண்டுக்கான உரிமமும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
உரிம அனுமதிக்கு மார்ச் மாதத்திலேயே விண்ணப்பித்தாலும், விற்பனைக்கான உரிமம் தீபாவளிபண்டிகைக்கு சில தினங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டு வருகிறது.
இது பட்டாசு வணிகர்களை பெருமளவு பாதிப்பதுடன், விற்பனைக்கான முன்னேற்பாடுகளை செய்வது, பாதுகாப்பாக விற்பனை செய்வது உள்ளிட்டவற்றில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, தமிழக அரசு பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பட்டாசு வணிகர்களின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பட்டாசு விற்பனை உரிம அனுமதியை விரைவுபடுத்தி, மத்திய அரசின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு 5 ஆண்டுகளுக்கு உரிமம்என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், தீபாவளிக்கு முன்கூட்டியே உரிமம் வழங்க வேண்டும். இது தொடர்பான கோரிக்கைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறுஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.