ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை போரூராட்சியில் உள்ள 7வது வார்டான நேரு பஜார் பகுதியில், உற்பத்தியாகும் கொசுக்களால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த மருந்து அடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அம்பேத்கர் நகர், சிட்ரபாக்கம், ரெட்டி தெரு, செட்டி தெரு, சாவடி தெரு, கலைஞர் தெரு, சிவன் கோயில் தெரு, நேரு பஜார், திருவள்ளூர் சாலை, அண்ணா நகர், நாகலாபுரம் சாலை, சத்தியவேடு சாலை, கால்வாய் கரை என 15 வார்டுகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் . இங்கு, மேலும், கடைகள், காவல் நிலையம், தாலுகா அலுவலகம், பத்திரபதிவு அலுவலகம் என பல்வேறு அலுவலகங்களும் இருக்கிறது. சென்னை – திருப்பதி சாலையில் உள்ள 7வது வார்டான நேரு பஜார் பகுதியில் மட்டும் மளிகை, காய்கறி, ஜவுளி கடை என 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகளுக்கு, சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தங்களுக்கு தேவையான பொருட்கள் இங்கு வந்துதான் ஆயிரக்காணக்கான மக்கள் வாங்கி செல்கின்றனர். இதனால், நேரு பஜார் பகுதியில் அதிகமாக குப்பைகள் சேர்கிறது.
இந்த குப்பைகள் காற்று அடிக்கும்போது அருகில் உள்ள சாலையின் இரு புறங்களிலும் உள்ள பேரூராட்சியின் கழிவு நீர் கால்வாய்க்கு செல்கிறது. இதனால் குப்பை கழிவுகள் அதிகமாக சேர்ந்து கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதே போன்று ஊத்துக்கோட்டையில் உள்ள அனைத்து கழிவு நீர் கால்வாய்களிலும் குப்பைகள் சேர்ந்து கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றத்தால் அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்கிறது. இதனால், தெருக்களில் உள்ள குப்பைகளாலும், கழிவு நீர் கால்வாய்களாலும் அதிக அளவு கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. இந்த கொசுக்கள் இரவு நேரங்களில் படையெடுத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடிகிறது. இந்த கொசுக்கள் கடிப்பதால் டெங்கு, மலேரியா மட்டுமல்லாமல் என்ன காய்ச்சலென்றே தெரியாமல் சிலர் தவித்து வருகின்றனர். எனவே, கொசுவால் ஏற்படும் நோய்களை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கழிவு நீர் கால்வாய் இல்லாத இடமே இல்லை. இந்த கால்வாய்களில் சேரும் குப்பை கழிவுகளால் கொசுக்கள் உற்பத்தியாகிறது. மேலும், தற்போது கடந்த சில நாட்களாக திடீர் திடீரென பெய்து வரும் மழையால் கொசுக்கள் அதிக அளவு உற்பத்தியாகி உள்ளது. கொசுக்களை விரட்ட கொசுவர்த்தி சுருள், லிக்வீடு ஆகியவைகளை பயன்படுத்தினாலும் எந்த பயனும் இல்லை. பகல் நேரத்தில் அலுவலகத்தில் வேலை செய்யும்போது, கொசுக்கள் கடிக்கிறது. இந்நிலையில் கொசுக்களால் நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.