புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
முப்படைகளில் 17.5 வயது முதல் 21 வரையிலானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நான்கு ஆண்டுகள் பணிபுரியும் அக்னிபாதை திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 14-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் வேலைக்கு தேர்வு செய்யப்படுவோரில் 25 சதவீதம் பேர் மேலும் 15 ஆண்டுகளுக்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர், இளைஞர்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டத்தில் வேலையில் சேருவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 21-லிருந்து 23-ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் சேரும் ராணுவ வீரர்கள் “அக்னிவீர்” என அழைக்கப்படுவர் என்று மத்திய அரசு தெரிவித்தது.
ஒப்பந்தகால அடிப்படையில் ராணுவத்தில் பணியாற்றும் அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று நடை பெற்றது. அப்போது, திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிடம் பதிலைப் பெற்று மத்திய அரசு 4 வாரங் களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனினும், ஜூன் காலகட்டத்தில் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிலான போராட்டங்களுக்கு வழிவகுத்த அக்னிபாதை திட்டத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.