திருத்தணி: திருத்தணி ஒன்றியத்தில் உள்ள அனைத்து சுடுகாடுகளையும் சீரமைக்கவேண்டும் என்று மக்களும் சமூகநல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்தில் அடங்கிய 27 ஊராட்சிகளில் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் என மூன்று மதத்தினருக்குமான சுடுகாடு, இடுகாடுகள் தனித்தனியாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான சுடுகாடு, இடுகாடுகள் பராமரிப்பின்றி விடப்பட்டதால் கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டிக் காணப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் அனைத்து சுடுகாடு பகுதிகளிலும் விஷ செடிகளும் புதர்களும் அதிகமாக வளர்ந்துவிட்டது. இதன்காரணமாக சடலங்களை எடுத்துக்கொண்டு செல்வதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.
இரவு நேரத்தில் யாரையாவது அடக்கம் செய்யவேண்டும் என்றால் விளக்கு வெளிச்சம் இல்லாததால் மக்கள் திண்டாடுகின்றனர். சில நேரம் இரவு நேரத்தில் இறுதி சடங்கு நடக்கும்போது பாம்புகள் வந்துவிடுகிறது. இதனால் மக்கள் ஒருவித அச்ச உணர்வுடன் தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர்.எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டரும் ஒன்றிய நிர்வாகம், ஊராட்சி நிர்வாகமும் இணைந்து வேகமாக செயல்பட்டு அனைத்து சுடுகாடுகளையும் புதர்களை அகற்றி சீரமைக்கவேண்டும். பாதை வசதி இல்லாத சுடுகாடுகளுக்கு உடனடியாக சாலை வசதிகளை ஏற்படுத்தி, விளக்கு வசதிகளை செய்துகொடுக்க வேண்டும், குடிநீர் வசதியும் ஏற்படுத்தி தரவேண்டும் என்று பொதுமக்களும் சமூகநல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.