பொதுவாக ரோபோக்கள் வெறும் சொல்கின்ற கட்டளையை நிறைவேற்றும் இயந்திரமாக மட்டுமே பயன்படும். ஆனால் ஒரு 13 வயது சிறுவன் மனித உணர்வுகளோடு இருக்கக்கூடிய ரோபோ ஒன்றை உருவாக்கி டெக் உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அப்துல் கலாம் தான் என்னோட ஹீரோன்னு ஆரம்பிச்சி எலான் மஸ்க் போல வரணும்னு சொல்லிருக்காரு பிரதிக். நல்லா இருக்கிங்களா என்று புன்சிரிப்புடன் பேச துவங்கிய பிரதிக்கின் சிறப்பு பேட்டி நமது சமயம் தமிழ் நேயர்களுக்காக.
நிருபர் : உங்களை பற்றி சொல்லுங்கள் பிரதிக்
பிரதிக்: என்னோட பெயர் பிரதிக் . நான் கேஆர்எம் பப்ளிக் பள்ளியில் 9வது படிக்கிறேன். எனக்கு வயது 13 ஆகிறது. சிறு வயதிலிருந்தே சாப்ட்வேர் மற்றும் டெக்னாலஜி மேல எனக்கு ஆர்வம் இருக்கு. எப்பவும் டெக்னாலஜி வளர்ச்சி மேல ஆர்வமா இருப்பன். என்னுடைய அல்டிமேட் இலக்கே ஒரு ராக்கெட் லான்ச் பண்ணனும். என்னோட குடும்பத்த பொறுத்தவரைக்கும் அம்மா அப்பா முடிந்தளவு என்னோட முயற்சிகளுக்கு ஆதரவு கொடுத்து உதவி செய்வாங்க. அதே போலதான் பள்ளிலயும் எந்த சந்தேகம் கேட்டாலும் உடனே தீர்த்துடுவாங்க. எது தேவைனாலும் உடனே செஞ்சி கொடுத்துடுவாங்க.
நிருபர் : எப்படி டெக்னாலஜி மேல ஆர்வம் வந்துச்சி?
பிரதிக்: நா 4 வயசுல இருந்தே நிறைய அறிவியல் சார்ந்த பத்திரிகைகள் படிக்கிறது. அது சார்ந்த விடீயோக்கள் பார்க்கிறது என அதன் மீது ஆர்வமா இருப்பன்.அதே மாறி சின்ன வயசுல அப்துல்கலாம் அய்யா மேல அதிகமா ஆர்வம் இருந்துச்சி. அதுனாலதா டெக்னாலஜி பக்கம் வந்துட்டேன்.
நிருபர்: இப்ப உங்களோட நிகழ்கால ரோல் மாடல் யாரு?
பிரதிக்: இப்போ எலான் மஸ்க்தான் என்னோட ரோல் மாடல். அவரு எப்படி சாதாரண இடத்துலருந்து உலகமே அண்ணாந்து பாக்குற அளவுக்கு உயர்ந்துருக்காருனு நெனச்சாலே பிரமிப்பா இருக்கு. அவரு மாறி நானும் பெரிய ஆளா வரணும்ன்றதுதான் என்னோட கனவே! அவர சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அவரோட ப்ரொஜெக்ட்டுகளை எப்படி இவ்ளோ நேர்த்தியா முடிக்கிறார்னு டிப்ஸ் கேப்பன். அவரோட OPEN AI ப்ராஜெக்ட் மேல எனக்கு ஆர்வம் இருக்கு. அதுல வாய்ப்பு கிடைக்குமான்னு கேப்பன்.
நிருபர்: எப்படி இந்த டெக்னாலஜியை கற்று கொண்டீர்கள்?
பிரதிக்: நான் இதுவரைக்கும் எங்கயும் இதுக்காக பணம் கட்டி சிறப்பு வகுப்போ அல்லது கோர்ஸ் கூட போனதில்லை. எல்லாமே இன்டர்நெட்ல இருந்துதான் கத்துக்கிட்டேன். குறிப்பா கோவிட் காலத்துல அதிகமா நேரம் கிடைச்சிது. அப்ப கூகுள், youtube மூலமா இதல்லாம் கத்துக்கிட்டு செயல்படுத்தி பார்ப்பன். பைத்தான்ஸ் , ஜாவா ஸ்கிரிப்ட், சி ,சி++, ரோபோடிக்ஸ் என பல விஷயங்களை நானே இன்டர்நெட் மூலமா கத்துக்கிட்டேன். இது எதுவும் எந்த பயிற்சி வகுப்புக்கும் போகாம நானே கத்துக்கிட்டேன். ஏன்னா வகுப்புகள் போனா ஒரு லிமிட்டேஷன் இருக்கும்.ஆனா நானே கத்துக்கும்போது நானே டெஸ்ட் பண்ணி பாக்கலாம். அதுல இன்னும் நிறைய கத்துக்கலாம்.
நிருபர்: இதுவரைக்கும் கண்டுபிடித்தவை?
பிரதிக்: முதலில் நான் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ப்ரொஜெக்ட்டுகள் தான் பண்ண ஆரம்பிச்சன். பிறகு செயலிகள்(app) சார்ந்த ப்ரொஜெக்ட்டுகளை பண்ண ஆரம்பிச்சன். அப்ப கோவிட் சமயத்துல கோவிட் ரிப்போர்ட்டர் அப்படின்ற கோவிட் இருக்கவங்கள ரிப்போர்ட் பண்ற மாறி ஒரு செயலி உருவாக்கினேன்.
பிறகு salad meet அப்படின்ற செயலி ஒன்னு உருவாக்குன. அது மூலமா வகுப்புகள் எடுக்கும்போது எனக்கு நெட் இல்லனு மாணவர்கள் ஏமாற்ற முடியாது. காரணம் அந்த செயலியிலேயே எந்தளவு நெட் இருக்கிறது என்ற அளவை காட்டி விடும். அப்பல்லாம் என்னோட நண்பர்கள் இதை வெளிய கொண்டு வரதானு ஜாலியா கிண்டல் பண்ணுவாங்க.
அப்புறம் வெப் பில்டர், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வுகள் எல்லாம் பன்னிருக்கன். இது எல்லாம் என்னோட வலைதளத்துல டெமோக்காக வெச்சிருக்கன். அதற்கு பிறகுதான் இப்ப இந்த ரோபோவை உருவாக்கிருக்கன்.
நிரூபர்: புது ரோபோவை பத்தி சொல்லுங்க?
பிரதிக்: இந்த புது ரோபோ மனிதர்களை போல நடந்துக்கும். இதற்குன்னு உணர்வுகள் இருக்கு. அத நீங்க திட்டிட்டா அது கோவப்பட்டு .சோகமாகிடும். நீங்க திருப்பி அதுகிட்ட சாரி கேட்டாதான் அது மறுபடியும் உங்ககிட்ட பேசும். அதே போல நீங்க கேக்குற எல்லா கேள்வியையும் உள்வாங்கிட்டு உங்களுக்கு சலிக்காம பதில் சொல்லும். உங்களோட ஒரு நல்ல மனித நண்பர் போலவே நடந்துக்கும்.
நிரூபர்: இதற்கும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட்டுக்கும் என்ன வித்தியாசம்?
பிரதிக்: பொதுவா கூகுள் voice assistant சில அடிப்படையான செயல்பாடுகளுக்கு மட்டும்தான் பயன்படும். அதே மாறி கஷ்டமான அல்லது வாய்ஸ் புரியாத கேள்விகளுக்கு அதால பதில் சொல்ல முடியாது. ஆனா என்னோட ரோபோ ரஃபி(raffi) கடினமான கேள்விகளை உள்வாங்கி புரிஞ்சிகிட்டு பதில் சொல்லும். அதே போல என்னோட ரஃபிக்கு உணர்வுகள் இருக்கு. அது கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் கிட்ட இருக்காது. அதனால அது கூட பேசுறது மனிதர்கள் கூட பேசுற உணர்வை நமக்கு தராது.
நிரூபர்: உங்களோட அல்டிமேட் இலக்கு என்ன?
பிரதிக்: இந்த ரோபோவ அப்கிரேட் செய்து மனிதர்களை போலவே அதன் நடவடிக்கைகள் இருப்பது போல் செய்ய போகிறேன். விண்வெளியில் இருக்கக்கூடிய குப்பைகளை அகற்றுவதற்கான டெக்னாலஜி கண்டுபுடிச்சி அத அனுப்பனும்.
அதே போல இது போன்ற டெக்னாலஜி வளர்ச்சி அடையிறதால சமூகத்துல மனிதர்கள் கையால் மலம் அல்லும் வேலை செய்வது, இதர கிளீனிங் சார்ந்த பணிகள் செய்வதை நிறுத்திட்டு அதற்கு மாற்றா ரோபோக்கள் அந்த பணிகளை செய்ற மாறி கொண்டு வர முடியும். அதனால இது போன்ற வேலைகளை செய்ய கூடிய நபர்களுக்கு ஏற்பட கூடிய உடல்ரீதியான பிரச்சனைகள்ள இருந்து விடுதலை கிடைக்கும்.இது மாறி மனிதர்களுக்கு தேவையான பல வேலைகளை சுலபமாக செய்ய முடியும்.
நிரூபர்: எந்திரன் படம் மாறி ரோபோக்கள் மனிதர்கள ஆதிக்கம் செலுத்தும்னு சொல்றாங்களே?
பிரதிக்: நிறைய பேரு டெர்மினேட்டர் படம்லாம் பார்த்துட்டு அப்படிலா சொல்றாங்க. அத பத்தி சொல்லனும்னா அதற்கும் வாய்ப்புகள் இருக்கு. ஆனா அத கன்ட்ரோல் பண்ற அறிவு மனிதர்கள்கிட்ட இருக்கு. ஒரு காலத்துல மனிதர்கள் உடல் அளவுல பலமாவும், மூளை அளவுல பலம் குன்றியும் இருந்தோம். ஆனால் இப்போ பரிணாம வளைச்சி அடைஞ்சி மூளை அபாரமா வளந்துருச்சி ஆனா உடல் அளவுல பலம் குன்றியவர்களா மாறிட்டோம். இது மாறி எதிர்காலத்துல நம்ம நல்லா யோசிப்போம், ஆனா அந்த வேலைய நம்மளால செய்ய முடியாம போகலாம். அப்ப நமக்கு ரோபோக்கள் தேவை படும். அதே சமயம் அதுங்கள கட்டுப்படுத்துற டெக்னாலஜியும் நம்மகிட்ட இருக்கும்.
நிரூபர்: இது போன்ற ஆராய்ச்சிகளுக்கு அரசாங்கம் என உதவி செய்யணும்னு விரும்புறீங்க?
பிரதிக்: அரசு சார்பா இதற்கான போட்டிகள் வெச்சி எல்லா வயது கண்டுபிடிப்பாளர்களும் சேர்ந்து கலந்துக்குற மாதிரி செய்யணும். அதே போல இதற்கான பொருட்கள் பல இடங்களில் தான் கிடைக்கும். அதனால பலருக்கு அப்படி தேடி வாங்கி கற்று கொள்வது சாத்தியமில்லை. எனவே அரசே இதற்கு எல்லாம் ஒரே இடத்துல கிடைக்குற மாதிரி மையங்களை உருவாக்கனும்.
நன்றி.
– சுபாஷ் சந்திரபோஸ்