சென்னை: இதை எப்படி அரசியல் பண்ணுவது யோசித்துக் கொண்டிருக்கிறேன்…” என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் உயிரிழந்த இராணுவ வீரர் இலட்சுமணன் உடலுக்கு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்த சென்றிருந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினரோடு ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக 3 பெண்கள் உட்பட 5க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுகவிலிருந்து பாஜகவிற்கு மாறியவரும் தற்போதை மதுரை பாஜகவின் மாவட்ட தலைவரான டாக்டர் சரவணன் பாஜகவிலிருந்து விலகினார்.
இது பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் நேற்று மதுரை விமானநிலைய சம்பவம் தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மதுரை மாவட்ட பாஜக நிர்வாகியும் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக அரசியல் செல்லும் நிலை எப்படி இருக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
அந்த ஆடியோ பதிவில் “சம்பவம் நடக்கும் இடத்துக்கு 1000 பேரை அழைத்து வர வேண்டும். ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை மாஸாக செய்யவேண்டும். அங்கு கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி இல்லாத நிலையில், அங்கு வேண்டும் என்றே சென்று அதன் மூலம் அரசியல் செய்ய வேண்டும்” என அண்ணாமலை பேசியிருக்கிறார். இந்த ஆடியோ பதிவு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆடியோ வெளியான சிறிது நேரத்திலேயே அண்ணாமலையுடன் பேசியதாக சொல்லப்படும் தற்போதைய மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன், “அந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் போன்று மிமிக்ரி செய்யப்பட்டுள்ளது. மேலும் அண்ணாமலையின் குரல் அவருடையதுதான் ஆனால் அவர் வேறுவேறு இடங்களில் பேசியதை வெட்டி ஓட்டி ஒன்றாக்கி இருக்கிறார்கள்” என விளக்கம் அளித்து உள்ளார்.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று இந்த ஆடியோவை கேட்பவர்கள் நக்கல் செய்கின்றனர். இதுபோன்ற ரகசிய ஆலோசனைகள் இல்லாமலா அரசியல் செய்வார் அண்ணாமலை என்றும் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.