தி.மலை: திருவண்ணாமலையில் 10க்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் பல கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை கடனாக பெற்று ஏமாற்றி வந்த 4 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 4 பெண்கள் 100-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து தங்களுக்கு வங்கியில் இருந்து ரூ.40 கோடிக்கு மேல் பணம் வர வேண்டி உள்ளதாக கூறி பொதுமக்களிடம் கைவரிசை காட்டியுள்ளனர். தங்களுக்கு பணம் மற்றும் நகைகளை கடனாக தருபவர்களுக்கு இரட்டிபாக தருவதாக ஆசை வார்த்தை கூறி வலை விரித்துள்ளனர். அதற்கு உத்தரவாதமாக காவல்துறை உயரதிகாரி எழுதியதாக கூறி போலி கடிதங்கள் ஒன்றை காட்டி கிராம மக்களிடம் பலகோடி ரூபாய் பணம், நகைகளை கடனாக பெற்று மோசடி செய்துள்ளனர்.
5 ஆண்டுகளாகியும் கொடுத்த நகை, பணம் கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள், கிராம மக்கள் கண்ணீர் மல்க மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி, சசிகலா, அமிர்தம் மற்றும் லதா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழக அரசின் முத்திரை, காவல்துறை உயரதிகாரிகளின் கையெழுத்து ஆகியவற்றை நம்பி பணம், நகைகளை கொடுத்து ஏமாந்தவர்கள் தங்களுக்கு விடிவு ஏற்படாத என செய்வதறியாது தவிப்பது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.