சமீபத்தில் நடந்த ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் 2022 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி அவர்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்தியாவில் 6G சேவை அறிமுக படுத்தும் அளவிற்கு நாம் வளர்ந்துவிடுவோம் என பேசியுள்ளார்.மேலும் 5G சேவையால் நாட்டுக்கு கிடைக்க போகும் பொருளாதார வளர்ச்சி மற்றும் நன்மைகள் குறித்தும் பேசியுள்ளார்.
இந்தியாவின் இளம் தலைமுறை மூளைகளை ஊக்குவிக்கும் விதத்தில் வருடா வருடம் நடத்த படும் நிகழ்வுதான் ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் நிகழ்வு. இதன் மூலம் இந்திய அறிவியல் வளர்ச்சியில் மாணவர்களின் அற்புதமான ஐடியாக்களை செழுமைப்படுத்தி பயன்படுத்துவதே இதன் நோக்கம்.
அதன் 2022 நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அவர்கள் இந்திய மாணவர்கள் மற்றும் டெக்னாலஜி துறையை பாராட்டி பேசியுள்ளார். மேலும் இந்தியாவின் டெக் வளர்ச்சியால் அடுத்த பத்தாண்டுகளுக்குள் 6G சேவையை அறிமுகப்படுத்த முடியும் என்றும் பெருமிதமாக கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் இன்னும் சில நாட்களில் அறிமுகமாக போகும் 5G சேவை இந்திய பொருளாதாரத்தில் 450பில்லியன் டாலர் அளவிற்கு பங்காற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமின்றி இந்தியாவில் ட்ரோன் டெக்னாலஜி, டெலி-கன்சல்டேஷன் போன்ற பல விதமான டெக்னாலஜி வளர்ச்சிகளை அறிமுகப்படுத்துவது குறித்து அவர் பேசியுள்ளார். மேலும் விவசாயம் மற்றும் மருத்துவ துறையில் ட்ரோன் டெக்னாலஜி மூலம் எப்படி உதவலாம் என்பதை மாணவர்கள் நீங்கள்தான் யோசிக்க வேண்டும் என்றும் உங்களது கண்டுபுடிப்புகள் அனைத்தும் எதிர்காலத்தில் நாட்டுக்கு பயன்படுவதாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்தியாவில் 5G சேவையை அறிமுகப்படுத்துவதற்கான போட்டியில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் போன்ற கம்பெனிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. மேலும் ஜியோ ஏற்கனவே பின்லாந்தை சேர்ந்த ஒரு பல்கலைகழகத்தோடு இணைந்து 6G குறித்தான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீப காலமாக 6G குறித்து பிரதமர் மோடி பேசி வருவது மிக விரைவில் இந்தியாவில் 6G சேவை அறிமுகமாக போவதற்கான ஒரு முன்னறிவிப்பு போலதான் உள்ளதாக நிபுணர்கள் பலரும் சொல்கின்றனர்.
– சுபாஷ் சந்திரபோஸ்