சீர்காழி: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி தையல் நாயகி அம்பாள் உடனாகிய கோயில் அமைந்துள்ளது.இந்த கோயிலில் நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மேலும் 18 சித்தர்களில் முதன்மையான தன்வந்திரி சித்தர் கோயிலில் ஜீவசமாதி அடைந்துள்ளார். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசால் பாடல் பெற்ற தலமாகும். இத்தகைய புகழ்பெற்ற கோயிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் அமைந்துள்ள சித்தாமிர்த தீர்த்த குளத்தில் தண்ணீர் மாசுபட்டதால் தண்ணீரை மாற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீல ஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் அறிவுறுத்தலின்படி தனியார் வங்கி பங்களிப்புடன் குளத்தில் இருந்த தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. பின்னர் குளத்தில் கடந்த சில நாட்களாக தொழிலாளர்களைக் கொண்டு தூர்வாரும் பணி நடந்து வருகிறது. தூர்வாரும் பணியை தருமபுர ஆதீனம் அவ்வப்போது வந்து ஆய்வு செய்து செல்கின்றார்.
தூர்வாரும் பணி இன்னும் சில நாட்களில் முடிவடைந்த பின்பு, குளத்தில் மீண்டும் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பி பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிய வருகிறது. சித்தாமிர்த குளத்தை தூர்வாரி புதிய தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுத்த தருமபுர ஆதீனத்திற்கு பக்தர்கள் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். இக்கோயிலிற்குள் இருக்கும் சித்தாமிர்த தீர்த்தம் (குளம்) மிகுந்த சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது.
கிருத யுகத்தில் இத்தலத்திலுள்ள சிவ லிங்கத்தின் மீது காமதேனு பாலைப் பொழிய, அந்தப்பால் வழிந்தோடிச் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் கலந்ததனால், இக்குள நீர் சக்தி வாய்ந்ததாக்க் கருதப்படுகிறது. பகைச் சக்திகளால் பீடிக்கப்பட்டவர்கள் இக்குளத்தில் மூழ்கி எழ, அவற்றின் பிடியிலிருந்து விடுபடுவார்கள் என்கிறது தலப் புராணம்.
பாம்பு, தவளை கிடையாது
இக்குளத்தில் மீன்கள் உண்டு, தவளைகள் ஏதுமில்லை. காரணம் இக்குளத்தில் நீராடி தவம் செய்த சதானந்த முனிவர் தவத்தை தவளைகள் கலைத்ததால், அவர் இட்ட சாபத்தால் தவளை, பாம்பு ஏதும் இக்குளத்தில் இருப்பதில்லை என்று கூறுகின்றனர். மேலும் சித்தாமிர்த தீர்த்த குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்தால் 4, 448 நோய்கள் தீரும் என்பது ஐதீகம். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சித்தாமிர்த தீர்த்த குளத்தில் புனித நீராடி சுவாமிகளை வழிபாடு செய்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.