தமிழ்நாடு முதலமைச்சர்
இன்று (26.8.2022) அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கிரே நகரில் அமைக்கப்பட்டுள்ள எம்மாம்பூண்டி நீர்உந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அத்திக்கடவு – அவிநாசி திட்டமானது கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொன்றிற்கு 1.50 டி.எம்.சி. உபரிநிரை நீரேற்று முறையில் நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மொத்தம் 24,468 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணித் துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் நீர் நிரப்பும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு ரூ.1652 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. பின்னர் ரூ.1756.88 கோடி மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் பவானி, நல்லக்கவுண்டம்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய ஆறு நீர்உந்து நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் 2022-க்குள் முடிக்கப்பட்டு பரிசோதனை ஓட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது, இப்பணிகளை விரைந்து முடித்திட நீர்வளத்துறையைச் சேர்ந்த பொறியாளர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச். கிருஷ்ணணுண்ணி, நீர்வளத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.