கொரோனா முடக்கிய தொழில்; இயல்புநிலை திரும்பியதால் விநாயகர் சிலைத் தயாரிப்புத் தொழிலாளிகள் உருக்கம்!

இரண்டு வருடங்கள் கொரோனா பாதிப்பு காரணமாக பொதுவெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட பெரும்பாலான விநாயகர் சிலைகள் வியாபாரமாகாமல் தேங்கி கிடந்து பலருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக பெரிய விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் முதல் சிறிய வடிவிலான அச்சு விநாயகர் சிலை செய்பவர்கள் வரை அனைவரும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கொரோனாவின் வீரியமும் அதனால் ஏற்படும் பாதிப்பும் தற்போது வெகுவாக குறைந்து, இயல்பு நிலை திரும்பிவிட்டதால் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வழக்கம்போல விமர்சையாக கொண்டாடப்படவிருக்கிறது.

31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரவிருப்பதால் அச்சு விநாயகர் சிலை தயாரிப்பு பணி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிலைத் தயாரிப்பு

அந்த வகையில், வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த எல்.ஜி.புதூர் பகுதியில் தற்காலிக டென்ட் அமைத்து சிறிய வடிவிலான அச்சு விநாயகர் சிலை தயாரிப்பில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிலைத் தயாரிப்பில் இறுதிகட்டப் பணியான வர்ணம் தீட்டுதலில் மும்முரம் காட்டிக் கொண்டிருந்த பவர் லால் என்பவரைச் சந்தித்துப் பேசினோம்.

சிலைத் தயாரிப்பு

“நாங்க விநாயகர் சதுர்த்திக்கு 4 மாசத்துக்கு முன்னாடியே வேலையை ஆரம்பிச்சுடுவோம். அது மாதிரிதான் இந்த வருஷமும் ஆரம்பிச்சு கடைசியா இப்போ பெயின்டிங் வேலை நடக்குது. போன வருஷம் இதே மாதிரி நாங்க கல்புத்தூர் பகுதியில டென்ட் கொட்டாய் போட்டு அச்சு விநாயகர் சிலைய செஞ்சோம். கொரோனா வந்ததுனால எங்களுக்கு 2 லட்ச ரூபா நஷ்டமாகிடுச்சு. போன வருஷம் நாங்க இந்தத் தொழில் செய்வதற்கு ராஜஸ்தான்ல இருக்கிற எங்க வீட்டை 2 லட்ச ரூபாய்க்கு அடமானம் வச்சுதான் 3 ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கி செஞ்சோம். போன வருஷம் கொரோனாவால பொதுவெளியில விநாயகர் சிலை வைக்க தடை போட்டாங்க அதனால கொஞ்சமான அளவிலகூட வியாபாரம் சரியாக நடக்கல. இந்த வருஷம் அந்த தடை எல்லாம் இல்லாததுனால சிலை வியாபாரம் நல்லபடியா நடக்கும்னு நம்பிக்கையா செஞ்சுட்டு வர்றோம்.

இந்த சிலை செய்யறதுக்கான மூலப்பொருள் மாவு, மதுரையிலிருந்து மொத்தமாக வாங்குகிறோம். இதை தண்ணில போட்டு பிசைவோம். அதன் பிறகு கிட்டத்தட்ட 30-க்கும் மேல டிசைன்கள்ல இருக்குற அச்சுல போட்டு, மூன்று நாள்களுக்குப் பிறகு அந்த அச்ச எடுத்துடுவோம். அதுக்கு பிறகு அது சிலையா வந்துரும். ஒரு முறைக்கு 30 சிலைக்கு அச்சு போடுவோம், அதுல ரெண்டு மூணு சிலை டேமேஜ் ஆக வந்துரும். ஆனால் அந்த டேமேஜ் ஆன சிலைகூட ஒரு சில ஒட்டு வேலைகள் செஞ்ச பிறகு நல்லா வந்துரும், பெயின்ட் அடிச்சுட்டா ஒட்டு போட்டதுகூட தெரியாது.

சிலைத் தயாரிப்பு

எங்ககிட்ட 7 பேர் வேலை செய்றாங்க, எல்லோருமே ராஜஸ்தான்தான். ஒருத்தருக்கு 12,000 ரூபாய் சம்பளம், மூன்று வேளை சாப்பாடு தங்கறதுக்கு இடம் எல்லாமே நாங்களே பாத்துகிறோம். நாங்க வேலை செய்யறது, தங்குறது, தூங்குறது எல்லாமே இந்த டென்ட்டுக்குள்ளதான். எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. ரெண்டு பேரும் பக்கத்துல இருக்குற பால்வாடிக்கு போறாங்க. ராத்திரி நேரத்துல கொசு தொல்லை அதிகமா இருக்கு. இதெல்லாமே சகித்துக்கொண்டுதான் வயித்து பிழைப்புக்காக வேலை பார்க்கிறோம். எங்ககிட்ட 50 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரையிலான சிலைகள் இருக்கு.

சிலைத் தயாரிப்பு

2 அடிக்குள்ளான சிலைகள்தான் நாங்கள் செய்றோம். எங்ககிட்ட சிலை வாங்குறதுக்கு பெரிய ஆர்டர் ஒரு சில நேரங்களில் கிடைக்கும், வீட்டுக்கு ஒரு சிலை வேணும்னு சொல்லிட்டு வாங்கிட்டு போறவங்களும் இருக்காங்க. விநாயகர் சதுர்த்திக்கு முன்னால இருக்கிற மூணு நாள்களுக்குத்தான் நல்ல வியாபாரம் நடக்கும். அது போலதான் இந்த வருஷமும் நல்லா வியாபாரம் நடக்கும்னு நம்பிக்கையோடு இருக்கிறோம்.

போன வருஷம் கொரோனாவால நஷ்டமான காசு, இந்த வருஷம் கிடைக்கிற லாபத்தை வச்சுதான் சரிகட்ட முடியும்” என்றார்.

சிலைத் தயாரிப்பு

பவர் லால் நம்மிடம் பேசிக்கொண்டிருந்தபோது வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், “மழை பெய்யுற மாதிரி இருக்கு சார்… மழையில நனைஞ்சா சிலைகள் வீணா போய்டும். அதனால தார்பாய் போட்டு மூடணும், பாப்போம் சார்!” எனச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.