பரந்தூர் விமான நிலையத்திற்கு கையப்படுத்தும் நிலங்களுக்கு மூணரை மடங்கு அதிக விலை தருவோம்! அமைச்சர்கள் தகவல்…

சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு கையப்படுத்தும் நிலங்களுக்கு மூணரை மடங்கு அதிக விலை தரப்படும் என எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்களுக்கு அமைச்சர்கள் ஆசை வார்த்தை கூறி உள்ளனர். மேலும்,  அப்பகுதி மக்களுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதி அளித்துள்ளார்.

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள சில கிராமங்கள், நீர் நிலைகள், விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். அங்கு விமான நிலையம் அமைந்தால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் கிடைக்கும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால், பரந்தூர் விமான நிலையம் அமைய அந்த பகுதியைச் சேர்ந்த 12 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 21-ந் தேதி பரந்தூரை அடுத்த ஏகனாபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் கிராமத்தில் இருந்து ஊர்வலமாக நடந்து வந்து ஏகனாபுரம் கிராம சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே ஒன்றுகூடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தங்கள் பகுதியில் விளைநிலங்களையும், குடியிருப்புகளையும், கையகப்படுத்தி அகற்றி விட்டு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை கையில் ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் அங்கு சென்று பொதுமக்களிடம் கருத்துக் கேட்டார். அப்போது,  பரந்தூரில் விமான நிலையம் அமைவதை பாமக ஏற்காது என கூறினார். இந்த நிலையில்,  பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது பொதுமக்களிடம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பான அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, விமான நிலையத்தை எங்கு வேண்டுமானாலும் கட்டலாம், விளை நிலங்களை கட்டமைக்க முடியாது என்று அந்த பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

ந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டு வரும் நிலையில்,  சென்னை, தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறு, குறு தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது,

பரந்தூரில் புதிய விமானநிலையம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சர்வே எண் அடிப்படையில் நிலத்தின் மதிப்பு மாறுபடும். எனவே, கையகப்படுத்தும் நிலத்திற்கான சந்தை விலையைவிட 3 அரை மடங்கு இழப்பீடு அதிகமாக வழங்கப்படும். உதாரணத்திற்கு 100ரூ மதிப்பு என்றால் 350 மடங்கு வழங்கப்படும் என்று அமைச்சர் வேலு தெரிவித்தார்.

13கிராமத்தில், 1005வீடுகள் அப்புறப்படுத்த உள்ளோம். கையகப்படுத்தும் நிலத்திற்கு பணமும், வீடு கட்டுவதற்கு நிலமும், பணமும் வழங்குவோம் என்றவர், அவர்களுக்கு  விமானநிலையம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகாமையில், விரும்பக்கூடிய இடத்தில் வசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றனர். மேலும், அப்பகுதியில் வசிப்பவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

விவசாயிகள் எந்தவிதத்திலும் பாதிக்ககூடாது என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். ஆனால், இதுபோன்ற பொது நோக்கத்திற்கான திட்டங்கள் வரும்போது விவசாய நிலத்தை எடுப்பதை தவிர வேற வழி இல்லை. பெங்களூர், ஹைதராபாத் வளர்ச்சி நம்மை விட கூடுதலாக உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது நமக்கு புதிய விமான நிலையம் அவசியமாக உள்ளது.

பன்னூர், பரந்தூர் ஆகிய இடங்களில் ஒப்பிட்டு பார்க்கும் போது, பரந்தூரில் குறைந்த வீடுகள் தான் உள்ளது. அதனால் தான் பரந்தூர் பகுதி தேர்வு செய்யப் பட்டது. இதனால் பாதிக்கப்படும் மக்களும் குறைவு. தமிழகத்தின் பொருளாதாரம், அந்நிய செலாவணி ஈட்டுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளார்.

விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள 13 கிராமங்களில், நன்செய் 2446.79 ஏக்கர் புன்செய் நிலத்தை பொறுத்தவரையில் 799.59 ஏக்கருக்கு 1317.18 ஏக்கர் அரசு புறம்போக்கு உள்ளது. 4563.56 ஏக்கர் நிலம் கையகபடுத்த உள்ளோம். 3246 ஏக்கர் பட்டா நிலம் உள்ளது. புதிதாக அமைக்கபட உள்ள விமான நிலையத்தில் நீர் நிலைகள் பாதிக்காத வகையில், சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டு போல் ஓடுதளம் அமைக்கப்படும்.

கையகப்படுத்தும் நிலத்திற்கு பணமும் கொடுத்து, நிலத்திற்கு பதிலாக விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு அவர்கள் விரும்புகின்ற இடங்களிலேயே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடு கட்டுவதற்கான பணத்தையும் அரசாங்கமே வழங்கும்.

8வழிச்சாலை பணிகளின்போது, விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, மாற்றுவழியில் திட்டத்தை செயல்படுத்துங்கள் என்று தான் சொன்னோம். அந்த திட்டமே வேண்டாம் என்று சொல்லவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

இவ்வாறு  அமைச்சர் வேலு கூறினார்.

பேட்டியின் போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு! அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டு…

பரந்தூர் விமான நிலையம் அமைய 12 கிராமங்கள் எதிர்ப்பு: அன்புமணியின் கருத்து கேட்பு கூட்டத்தால் மேலும் சலசலப்பு…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.