விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றலைக் கண்டித்து ஆக்கிரமிப்பாளர்கள் சாலை மறியல் செய்ய முயன்றபோது, அவர்களை போலீஸார் தடுக்க முயன்றனர். அப்போது ஒருவர், பெண் போலீஸ் மீது பெட்ரோல் பாட்டிலைக் கொட்டியதால், கண் பாதிக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண் காவலர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் இந்திராநகர் பகுதியில் 4.5 ஏக்கர் நீர் நிலைப் பகுதியை ஆக்கிரமித்து இந்திராநகர் என்ற பெயரில் சுமார் 75 குடும்பத்தினர் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், விருத்தாசலத்தைச் சேர்ந்த பாபு என்பவர், நீர் நிலை ஆக்கிரமிப்புத் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்குத் தொடுத்துள்ளார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அகற்ற 2018-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்துள்ளார். இதையடுத்து நீதிமன்ற குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து அதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த 4 தினங்களாக அப்பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை போலீஸார் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தும், விருத்தாசலம் எம்எல்ஏ-விடம் முறையிட்டுள்ளனர். இருப்பினும் நீதிமன்ற உத்தரவு என்பதால் அவர்கள் எதுவும் செய்ய இயலாது எனக் கூறிவிட்டனர்.
இந்த நிலையில், இன்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்தது. அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் பலர், கடந்த 40 வருடங்களாக நகராட்சிக்கு வரி செலுத்தி வருகிறோம். இந்த நிலையில் வசிக்கும் குடியிருப்பை இடித்தால் நாங்கள் எங்கே செல்வோம் எனக் கேள்வி எழுப்பினர்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி 4-வது நாளாக தொடர்ந்தபோது திடீரென அப்பகுதி மக்கள் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு கடலூர்-விருத்தாசலம் மார்க்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கிருந்த போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை போலீஸார் பகுதியை பார்த்து கொட்டினார். இதில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர் அமுதாவின் மீது பெட்ரோல் கொட்டியதில், அவர் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு கதறி அழுதார். அப்போது அங்கிருந்த சக போலீஸார் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள், விருத்தாசலம் சார் ஆட்சியர் பழனியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தங்களுக்கு மாற்று இடம் கோரினர். ஆனால், 8 அவகாசம் அளித்திருப்பதாக வட்டாட்சியர் தனபதி தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.