முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்று. முன்காலத்தில் இப்பகுதியை ஆண்ட திருவிதாங்கூர் சமஸ்தான ராஜா, உள்ளூர் மக்களின் தரிசனத்திற்காக நடத்தப்பட்ட மூலத்திருவிழாதான் ஆவணித் திருவிழா. மாசித்திருவிழாவைப்போல ஆவணித் திருவிழாவும் 12 நாள்கள் நடைபெறும். ஆனால், குமரவிடங்கப்பெருமான் பெரியதேரில் வலம்வருதலுக்குப் பதிலாக சிறியதேரில் வலம் வருவார்.
தெப்ப உற்சவமும் நடைபெறாது. ஆவணித் திருவிழா தேய்பிறை நாள்களிலும், மாசித்திருவிழா வளர்பிறை நாள்களிலும் நடைபெறும். இங்குள்ள சண்முகர், சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் அதாவது படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் புரியும் பிரம்மா, விஷ்ணு ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாய் அருள்பாலிப்பவர். மும்மூர்த்தி வடிவத்திலேயே வழிபடும் அற்புதத் திருவிழாதான் இந்த ஆவணித் திருவிழா. இந்தாண்டு ஆவணித் திருவிழா, கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
5-ம் நாள் விழாவில் குடவருவாயில் தீபாராதனை நடந்தது. 7-ம் திருநாளில் சுவாமி சண்முகர் உருகுசட்ட சேவையிலும் வெற்றிவேர் சப்பரத்திலும், சிவப்பு சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளினார். 8-ம் திருநளில் சுவாமி சண்முகர், வெள்ளிச் சப்பரத்திலும், பச்சை சாத்தி அலங்காரத்திலும் எழுந்தருளினார். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், இன்று காலை நடைபெற்றது. குமரவிடங்கப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காலை 6 மணிக்குத் தேரில் எழுந்தருளினார். இதில், முதலில் விநாயகர் தேர் புறப்பட்டது.
இரண்டாவதாக சுவாமி தேரும் மூன்றாவதாக அம்மன் தேரும் ரத வீதிகளில் வலம் வந்து நிலையத்தை வந்தடைந்தது. ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. கொரனோ பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த இரண்டு ஆண்டாக அனைத்து முக்கியத் திருவிழாக்களும் கோயில் உட்பிராகாரத்திலும் கோயில் வளாகத்திலும் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்று வந்த நிலையில், தற்போதைய ஆவணித் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.