புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு பெறுகிறார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பொன்னாவரம் கிராமத்தில் 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி என்.வி.ரமணா பிறந்தார். தொடக்கத்தில் பத்திரிகையாளராக பணியாற்றிய அவர், 1983-ல் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொண்டார். ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய அவர், 2000-வது ஆண்டில் அதே உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013 செப்டம்பர் 2-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2014-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியானார். கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி நாட்டின் 48-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். அவர் இன்று ஓய்வு பெறுகிறார்.
இந்நிலையில், பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம், பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை விடுவித்தது, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டம் செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிரான மனு, பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குளறுபடி ஆகிய 4 முக்கிய வழக்குகளை நேற்று தலைமை நீதிபதிஎன்.வி.ரமணா விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.