கொவிட் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்படும் தடுப்பூசி காலாவதியாகிவிட்டதாக நினைத்து பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள பயப்பட வேண்டாம் என்று தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய மருத்துவ கவுன்சில் மற்றும் உலக சுகாதார அமைப்பின் செயல்பாட்டு அறிவியல் குழுவின் அனுமதியின் அடிப்படையில் பைசர் நிறுவனம் இந்த தடுப்பூசியின் காலத்தை நீட்டித்துள்ளது என்று அவர் கூறினார்.
உலகம் ஏற்றுக்கொண்ட சட்ட நடைமுறைக்கு ஏற்ப தடுப்பூசிகளின் காலாவதி காலம் நீடிக்கப்படும். அந்த நடைமுறைக்கு உட்பட்டு பைசர் நிறுவனமும் இந்த தடுப்பூசிகளின் காலத்தை நீட்டித்துள்ளது. எனவே, இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்வது பாதுகாப்பானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், 12 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களுக்கு, பாடசாலைகளில்; இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், அருகிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு சென்று அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பூஸ்டர் தடுப்பூசியின் அறுபது இலட்சத்திற்கும் அதிகமான டோஸ்கள் எஞ்சியுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.