ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தது தேசிய அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தற்போது, அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ்.சிப் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆசாத் மற்றும் சிப் ஆகியோருக்கு ஆதரவாக கட்சியின் ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் 5 பேர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக தோல்வியை தழுவிய நிலையில், பல மூத்த தலைவர்கள் தொடர்ந்து கட்சியிலிருந்து விலகியுள்ளனர். இவ்வாறு கட்சியில் இருந்து விலகிய தலைவர்கள் தங்களுக்கு போதிய மரியாதை இல்லையென்று குற்றம்சாட்டியுள்ளனர். மட்டுமல்லாது, ராகுல் காந்தி மீது தொடர் புகார்களை அளித்து வருகின்றனர். இந்த பட்டியலில் தற்போது குலாம் நபி ஆசாத்தும் இணைந்துள்ளார்.
தனது ராஜினாமா குறித்து அவர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ராகுல் காந்தி முதிர்ச்சியில்லாமல் நடந்து கொள்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சமயத்தில், நாம் கொண்டு வந்த ஒரு சட்டத்தையே அவர் அனைத்து ஊடகங்கள் முன்னிலையில் கிழித்தெறிந்தார். அந்த அவசரச் சட்டம் காங்கிரஸ் மூத்த தலைவர்களால் விவாதிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்ட சட்டமாகும். ஆனால், ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடத்தை இந்தியப் பிரதமர் மற்றும் மத்திய அரசின் அதிகாரத்தை முற்றிலும் தகர்ப்பதாக உள்ளது” என பல அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இவருக்கு ஆதரவாக, கட்சியின் ஜம்மு காஷ்மீர் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.எஸ்.சிப் எனப்படும் ராஜேந்திர் சிங் சிப் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அதேபோல அவருக்கு ஆதரவாக சரூரி, ஹஜி அப்துல் ரஷீத், முகத் அமீன் பாத், குல்ஜார் அகமது வானி என மற்ற 5 முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். கடந்த 2014 மற்றும் 2019 என இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களிலும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தலைமையில் கட்சி கடும் தோல்விகளை எதிர்கொண்டுள்ளது.
மட்டுமல்லாது 2014 மற்றும் 2022 க்கு இடையில் நடந்த 49 சட்டமன்றத் தேர்தல்களில் 39 இல் கட்சி தோல்வியடைந்தது. இவையனைத்தும் கட்சியின் தலைமை மீது குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு, புதிய அனுபவமற்ற நபர்கள் கட்சியின் விவகாரங்களைக் கையாள தொடங்கினர். மூத்த தலைவர்கள் அனைவரும் ஓரங்கட்டப்பட்ட நிலையில், தலைமை குறித்து எப்போதும் புகழ் பாடுபவர்கள் கட்சி நடவடிக்கையைக் கையாள தொடங்கினர் என்றும் குலாம் நபி ஆசாத் கட்சியை விட்டு விலகுவது குறித்து தலைமைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவையெல்லாவற்றையும் விட கட்சி மீண்டும் திரும்ப முடியாத இடத்திற்கு சென்றுவிட்டதாக கட்சியை விட்டு விலகிய தலைவர்கள் கூறியிருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.