மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழவளவு பகுதியில் வசித்து வந்தவர் முருகன் என்ற சுப்பையா (30). இவரது தனது மனைவி செல்வியுடன் வாழ்ந்துவந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முருகன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த அவர், மனைவியுடன் அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு மதுப்பழக்கத்திற்கு அடிமையான முருகன் தனது மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவி செல்வி பணம் தர மறுத்துள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த முருகன் தனது மனைவி செல்வி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த செல்வி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கீழவளவு காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து கணவன் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கானது மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தற்போதைய விசாரணை மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மதுரம் முன்பாக வந்தது. அப்போது, வாதங்களின் அடிப்படையில் முருகன் என்ற சுப்பையா மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டது. இதனையடுத்து மனைவி செல்வியை எரித்து கொலை செய்த கணவன் முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.