புதுடெல்லி: எதிர்வரும் 2030-க்குள் இந்தியாவில் 6ஜி சேவை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனை ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 நிகழ்வில் பேசியபோது அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 5ஜி அலைக்கற்றை ஏலம் இந்தியாவில் நடைபெற்றது. மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடிக்கு இந்த ஏலத்தில் விற்பனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.88 ஆயிரம் கோடிக்கு அலைக்கற்றையை வாங்கி ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும், வோடபோன் ஐடியா ரூ.18,784 கோடிக்கும் அலைக்கற்றையை வாங்கியதாக தெரிகிறது. இந்த மாத இறுதிக்குள் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஹேக்கத்தான் நிகழ்வில் பேசிய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “அக்டோபர் 12-ம் தேதிக்குள் 5ஜி சேவைகள் இந்தியாவில் அறிமுகமாகும்” என சூசகமாக தெரிவித்திருந்தார். அதோடு அடுத்த இரண்டு ஆண்டுக்குள் இந்தியாவின் நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் 5ஜி சேவை கிடைக்கப்பெறும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி 6ஜி சேவை குறித்து பேசி இருந்தார். “2030-க்குள் இந்தியாவில் 6ஜி சேவையை அறிமுகம் செய்யும் நோக்கில் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கேமிங் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்து இந்திய அரசாங்கம் ஊக்குவிப்பு வழங்கி வருகிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Addressing the Grand Finale of Smart India Hackathon 2022. It offers a glimpse of India’s Yuva Shakti. https://t.co/7TcixPgoqD
— Narendra Modi (@narendramodi) August 25, 2022