கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். சி.பி.எம் கட்சியை சேர்ந்தவர். நாட்டின் இளம் மேயர் என்ற பெருமையை தனதாக்கிய ஆர்யா ராஜேந்திரன் மேயர் ஆன சமயத்தில் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சி.பி.எம் கட்சியை சேர்ந்த பாலுச்சேரி எம்.எல்.ஏ கே.எம்.சச்சின் தேவும், ஆர்யாவும் காதல் திருமணம் செய்ய உள்ளனர்.
இவர்களது திருமணம் வரும் செப்டம்பர் 4-ம் தேதி காலை 11 மணிக்கு திருவனந்தபுரம் ஏ.கே.ஜி ஹாலில் நடைபெற உள்ளது. பால சங்கம் முதல் சி.பி.எம் கட்சியில் இருக்கும் இவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் சந்தித்தபோது, காதல் மலர்ந்துள்ளது. ஆர்யா ராஜேந்திரன் சி.பி.எம் கட்சியின் சாலா ஏரியா கமிட்டி உறுப்பினராக உள்ளார். கே.எம்.சச்சின் தேவ் கோழிக்கோடு மாவட்ட கமிட்டி உறுப்பினராக உள்ளார்.
இருவரும் சி.பி.எம் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் திருமண அழைப்பிதழிலும் புதுமை புகுத்தி உள்ளனர். வழக்கமாக திருமண அழைப்பிதழ்களில் விருந்தினர்களை அன்புடன் அழைப்பதாக மணமகனின் பெற்றோர் பெயரும், மணமகள் பெற்றோர் பெயரும் இடம்பெறும். ஆனால் ஆர்யா ராஜேந்திரனின் திருமண அழைப்பிதழிலும், சச்சின் தேவின் திருமண அழைப்பிதழிலும் அந்தந்த மாவட்ட சி.பி.எம் செயலாளர்கள் விருந்தினர்களை அழைப்பதாக அச்சிடப்பட்டுள்ளது.
மணமகளான ஆர்யா ராஜேந்திரன் தரப்பில் வெளியான திருமண அழைப்பிதழில், அனைவரையும் அன்புடன் அழைப்பதாக திருவனந்தபுரம் மாவட்ட சி.பி.எம் செயலாளர் ஆனாவூர் நாகப்பன் பெயர் அச்சிடப்பட்டுள்ளது. மணமகன் கே.எம்.சச்சின் தேவ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள திருமண அழைப்பிதழ் கட்சி லெட்டர் பேட் மாடலில் அச்சிடப்பட்டுள்ளது.
அதில், கோழிக்கோடு மாவட்ட கமிட்டி உறுப்பினரான கே.எம்.சச்சின் தேவ், சால ஏரியா கமிட்டி உறுப்பினர் ஆர்யா ராஜேந்திரன் ஆகியோருக்கு 4-ம் தேதி நடக்கும் திருமணத்துக்கும், 6-ம் தேதி மாலை 4 மணிக்கு கோழிக்கோட்டில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் வரும்படி கோழிக்கோடு மாவட்ட சி.பி.எம் செயலாளர் மோகனன் மாஸ்டர் அழைப்பது போன்று அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. இந்த திருமண அழைப்பிதழ்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.