தற்போது நீங்கள் பார்க்க இருக்கும் காட்சி நெஞ்சை உலுக்குவதாக இருக்கும். சமூக அக்கறை கருதி அந்தக் காட்சியில் இடம்பெறும் மாணவர்களையும் அவர்கள் பயிலும் பள்ளியின் அடையாளங்களையும் வெளியிட புதிய தலைமுறை விரும்பவில்லை. இன்னும் சொல்லப்போனால் எந்த நகரத்தில் நடந்தது என்பதையும்கூட மாணவர்கள் நலன் கருதி குறிப்பிட விரும்பவில்லை. தற்போது அந்த தொகுப்பை பார்க்கலாம்.
தமிழகத்தின் மத்திமப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டத்தில் பள்ளி செல்லும் சிறார்கள் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. அதுபற்றி கள ஆய்வில் இறங்கியது. புதிய தலைமுறை. அந்த மாவட்டத்தின் புதிய பேருந்து நிலையம் அருகே, டாஸ்மாக் கடை அருகே அரசுப் பள்ளி சீருடையுடன் மாணவர்கள் 2 பேர் புத்தகப்பையுடன் காத்திருந்தனர்.
காலை பத்தரை என்பதால், அப்போது டாஸ்மாக் கடை திறந்திருக்கவில்லை. ஆனால் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தது போலவே ஒரு நபர், மாணவர்களை நோக்கிச் சென்றார். அவரது இரண்டு கைகளிலும் மதுபாட்டில்கள். கள்ளச்சந்தையில் மது விற்கும் அவர், வாடிக்கையாளர்களைக் கையாள்வது போலவே, வெகு இயல்பாக மாணவர்களிடம் மதுபாட்டிலைக் கொடுத்துவிட்டு நகர்ந்தார்.
இதனால் முகமலர்ச்சியடைந்த மாணவர்கள் இருவரும், அங்கிருந்து நகர்ந்து ஒரு கடைக்குச் சென்றனர். அங்கே தண்ணீர் பாட்டிலும் நொறுக்குத் தீனியும் வாங்கி புத்தகப்பையில் வைத்தனர். அங்கிருந்து படு உற்சாகமாக நடைபோட்ட அவர்கள், ஆட்சியரகம் செல்லும் சாலையில் புதர் நிறைந்த பகுதியில் அமர்ந்து மதுவை அருந்தினர். பள்ளி சீருடையில் இருந்த மாணவர்கள் மது அருந்தியது மட்டுமல்ல, அவர்கள் புகை பிடித்ததும் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மதுவும், புகையும் முடிந்த பிறகு அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் சற்றே தள்ளாடியபடி தெருக்களில் நடந்து சென்றனர். பள்ளி நேரத்தில் வீதிகளில் திரியும் அவர்களை யாரும் என்னவென கேட்கவில்லை. நாம் அவர்களை விசாரித்தபோது, தங்களை ஆசிரியர்கள் திட்டியதாகவும் அதனால் பள்ளி செல்லவில்லை என்றும் கூறினர்.
ஒளிமயமான எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் போட உதவும் புத்தகப்பையில், இழிவான மதுபாட்டிலை வைத்து பள்ளி மாணவர்கள் நடமாடும் நிலை மாற வேண்டுமென்பது இளைய தலைமுறையின் மீது அக்கறை கொண்டவர்களின் கோரிக்கை. பள்ளி மாணவர்களுக்கு மது, புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் விற்கப்படுவதைத் தடுப்பதே அதற்கு ஒரே தீர்வு என்பது அவர்களின் கருத்து.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM