திருவனந்தபுரம்: கேரளாவில் வளர்ப்பு யானைகளை கயிறு இழுக்கும் போட்டிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்று வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 10 நாட்கள் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
இந்த நாட்களில் தனியார் மற்றும் அரசுத்துறைகளின் சார்பில் கலை நிகழ்ச்சிகள், கயிறு இழுக்கும் போட்டி, விளையாட்டுப் போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கிராமங்களில் மட்டுமல்லாமல் நகர்ப்புறங்களிலும் பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கயிறு இழுக்கும் போட்டிகளுக்கு வழக்கமாக யானைகளையும் பயன்படுத்துவது உண்டு. ஒருபுறம் யானையும், மறுபுறத்தில் ஊர் மக்களும் சேர்ந்து கயிறு இழுப்பார்கள்.
இந்த வருடம் கயிறு இழுக்கும் போட்டிகளுக்கு யானைகளை பயன்படுத்தக் கூடாது என்று கேரள வனத்துறை உத்தரவிட்டு உள்ளது. தடையை மீறி யானைகளை பயன்படுத்தினால் ₹50 ஆயிரம் அபராதமும், 2 வருடம் வரை சிறைத் தண்டனையும் கிடைக்கும் என்று வனத்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக யானை உரிமையாளர்களுக்கு வனத்துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது.