பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்து தொடங்கிய நிறுவனங்களின் பட்டியலே பெரிதாக இருக்கிறது. அந்தளவுக்கு தற்போது வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான பிஸினஸ் குழுமங்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களால் தொடங்கப்பட்டன. இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது பினோலெக்ஸ்.
10 குழந்தைகளைத் தவிக்கவிட்டுப் போன அப்பா!
இந்தக் குழுமத்தை தொடங்கியவர்கள் பிரல்ஹத் சபாரியா (pralhad chhabria) மற்றும் கிருஷ்ணதாஸ் சபாரியா சகோதரர்கள். பாகிஸ்தான் கராச்சியில் வாழ்ந்தவர்கள். பெரும்பணக்கார குடும்பம் இவர்களுடையது. வீடு, தோட்டம் தொழில், நகை என 1940 -களில் வசதியான குடும்பமாகவே இவர்களுடைய குடும்பம் இருந்தது. ஆனால், இவையனைத்தும் ஒரே நாளில் மாறியது. 1942-ம் ஆண்டு இவர்களின் அப்பா மாரடைப்பால் காலமானார். குடும்பத்தில் 10 குழந்தைகள். இதில் சரிபாதி ஆண்கள், பெண்கள்.
பிரல்ஹத் சஹாரியா வீட்டில் ஐந்தாவது வாரிசு என்பதால், அப்பா இறந்தவுடன் குடும்பச் சுமை இவருக்கு உருவாகவில்லை. இவர்களுடைய அண்ணன்கள் பார்த்துக்கொண்டனர். ஆனால் அது மேலும் சிக்கலை உருவாக்கியது. பிரல்ஹத்துக்கு 12 வயது இருக்கும்போது அப்பா இறந்தார். ஆனால், 20 வயதுக்குள் இருக்கும் அண்ணன்கள் அப்பாவின் அனைத்துத் தொழில்களையும் பார்த்துக்கொண்டனர். ஆனால், அண்ணன்கள் எடுத்துக்கொண்ட குறுகிய காலத்திலே குழுமம் நஷ்டத்தை சந்தித்தது. அனைத்து சொத்துகளையும் விற்கவேண்டிய சூழல். இதனால் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பிரல்ஹ்த் வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் உருவானது.
அங்கிருந்து அமிர்தரஸில் உள்ள அக்கா வீட்டில் இருந்து சிறு சிறு வேலைகள் செய்தார். சில காலத்துக்கு பிறகு குடும்பத்துடன் மும்பைக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு சில காலம் இருந்தபிறகு புனேவுக்கு இடம்மாறினார்கள். அங்கு ஒரு எலெக்ட்ரிக்கல் ஸ்டோர் தொடங்கி சகோதரர்கள் நடத்திவந்தனர். தொழில் லாபகரமாக இருந்தது.
fine = flexible + பினோலெக்ஸ்
1950 -களின் தொடக்கத்தில் இந்திய ராணுவத்தில் இருந்து சில லட்ச ரூபாய் அளவிலான ஆர்டர்கள் வந்தன. அப்போதுதான் இதில் மிகப் பெரிய வாய்ப்பு இருப்பதை இந்த சகோதரர்கள் உணர்ந்தார்கள். இதுவரை எலெக்ட்ரில் பொருள்களை விற்பனை செய்துவந்தவர்கள் தயாரிக்க திட்டமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஜப்பானில் இருந்து ஆலையை மெஷின்களை வாங்கினார்கள். இதற்காக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கடன் கொடுத்தது. இவர்கள் சிந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதாலே வங்கி கடன் கொடுத்தது.
இந்தியன் கேபிள் இண்டஸ்ட்ரீஸ் என்னும் பெயரில் தொடங்கப்பட்ட இந்த தொழில் ஆரம்பத்தில் சில சிக்கல்கள் இருந்தாலும் வளரத்தொடங்கியது. கேபிள்களைத் தயாரிக்க தொடங்கிய நிறுவனம் அடுத்தகட்ட விரிவாக்கத்துக்குத் திட்டமிட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ரப்பரைவிட பி.வி.சி தயாரிப்பு பரவலானது. ஆனால், இந்தியாவில் அதுவரை ரப்பர் மட்டுமே பயன்படுத்தபட்டது.
இந்தியாவில் பி.வி.சி இருந்தாலும் அது இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக இருக்கும். அதனால், இந்தியாவில் முதல்முதலாக பி.வி.சி ஆலையை அமைக்க திட்டமிட்டார்கள். 1959-ம் ஆண்டு பி.வி.சி தயாரிக்கப்பட்டது.
இதன்பிறகே fine and flexible எனும் வார்த்தையில் இருந்து பினோலெக்ஸ் என்னும் பெயர் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல விரிவாக்க பணிகளில் கவனம் செலுத்தியது. புதிய புராடக்ட்டுகள் புதிய எல்லைகளில் விரிவுபடுத்தியது.
தவறும் தீர்வும்…
இந்த ஆலைக்கு மூலப்பொருள்கள் அனைத்தும் இறக்குமதி செய்யவேண்டி இருப்பதால் இரண்டு விதமான ரிஸ்க்களை நிறுவனம் கையாளவேண்டி இருந்தது. மூலப்பொருளின் விலை மற்றும் கரன்ஸி ரிஸ்க். சமயங்களில் மூலப்பொருள்கள் விலையில் தொடர்ந்து சீரற்ற தன்மை இருக்கும். அப்படி இருக்கும் சமயத்தில் நஷ்டத்துக்கான வாய்ப்பு அதிகம்.
இதனைத் தவிர பாரக்ஸ் டெரிவேட்டிவ்ஸ்களில் கவனம் செலுத்தியது. இதன் மூலம் ஏற்ற இறக்கத்தை தவிர்க்கலாம் என்பதுதான் திட்டம். ஆனால், இது மேலும் நிறுவனத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. 2007-ம் ஆண்டு கடுமையான நஷ்டத்தை சந்தித்தது. இதற்கு முந்தைய ஆறு ஆண்டுகளில் டெரிவேட்டிவ் மூலம் மட்டுமே 180 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
ஆனால், இந்த நஷ்டத்திலும் ஒரு நல்லது இருந்தது. பொதுவாக எந்த பொருளையும் தொழிற்சாலைகளில் இருந்து வாங்கிய பிறகு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகுதான் பணம் கொடுப்பார்கள். ஆனால் இந்த இடத்தில் வேறு யுத்தியைக் கொண்டுவந்தது பினோலெக்ஸ். முன்கூட்டியே பணத்தை கட்டினால்தான் பொருள்களை டெலிவரி செய்ய முடியும் என்னும் யுத்தியை கொண்டுவந்தது பினோலெக்ஸ்.
குடும்பச் சிக்கல்…
நிறுவனங்கள் நீண்டகாலமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற தலைமை இருக்க வேண்டும். அடுத்தகட்ட தலைமையை உருவாக்க வேண்டும் இது இரண்டும் இல்லை என்றால் எதிர்காலம் பாதிப்படையும். இந்த சிக்கலில்தான் பினோலெக்ஸ் இருக்கிறது. சிறிய கடை எப்படி பெரிய நிறுவனமாக மாறியது என்பது குறித்து நாம் தெரிந்துகொள்வது அவசியம். அதேபோல பெரிய நிறுவனத்தின் சிக்கல் குறித்தும் நாம் தெரிந்துகொள்வது அவசியம்.
வரி சிக்கலைத் தவிர்ப்பதற்காக இரண்டு முக்கியமான நிறுவனங்கள் மட்டுமல்லாமல், 15 சிறிய நிறுவனங்களையும் உருவாக்கியது. ஆனால், காலப்போக்கில் இதனை நிர்வகிக்க முடியாமல் 2010-ம் ஆண்டு ஆர்பிட் எலெக்ட்ரிக்கல் என்னும் ஹோல்டிங் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இதில் பிரல்ஹத் சபாரியாவுக்கு 88% பங்குகள் ஒதுக்கப்பட்டது. கிருஷ்ணதாஸ்க்கு 7% பங்குகள் மட்டுமே இருந்தது. இவர்கள் இருக்கும் வரை எந்த சிக்கலும் இல்லை. பிஸினஸ் விஷயத்தில் இரு குடும்பத்துக்கு சம பங்கு இருந்தது.
இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள். இவர்களுக்கு சில சிக்கல்கள் இருந்தாலும் 2016-ம் ஆண்டு பிரல்ஹத் மறைவுக்கு பிறகு சிக்கல் வெளியே தெரியத்தொடங்கியது. பிரல்ஹத் மகன் பிரகாஷ் மற்றும் கிருஷ்ணதாஸ் மகன் தீபக் இடையே சிக்கல் சட்டப்போரட்டம் நடந்து வருகிறது.
சுமார் ரூ.16,000 கோடி சந்தை மதிப்புள்ள குழுமம் பங்காளி சண்டையில் சிக்கி இருக்கிறது. பினோலெக்ஸ் குழுமம் தற்போது திருப்புமுனை தருணத்தில் இருக்கிறதா அல்லது சரிவு தொடங்கி இருக்கிறதா என்பது பில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. காத்திருப்போம், வரலாறு என்ன அதிர்ச்சியை நமக்குத் தரப் போகிறது என்று.
(திருப்புமுனை தொடரும்)