விநாயகர் சதுர்த்தி: திருச்சியில் கமிஷனர் கூட்டத்தை புறக்கணித்த இந்து அமைப்புகள்; வாக்குவாதம்- வீடியோ

க. சண்முகவடிவேல்

Trichy news today in tamil: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 31-ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அந்தவகையில் திருச்சியிலும் விநாயகர் சதுர்த்தி விழா பிற மாவட்டங்களை காட்டிலும் வெகு உற்சாகமாக பல்வேறு பகுதிகளில் பெரிய பெரிய விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தநிலையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது திருச்சி மாநகரில் திருக்கோவில்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து விசர்ஜனம் செய்வது தொடர்பாக திருச்சி மாநகர காவல்துறை சார்பில் இந்து முன்னணி, இந்து அமைப்புகள், பாஜகவினர் மற்றும் திருக்கோவில் நிர்வாகிகளுடன் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விடுத்ததால், மாநகர காவல் ஆணையர் அரங்கினுள் வந்தவுடன் கூட்டத்தை புறக்கணித்து இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் வெளியேறினர். இதனால் கூட்ட அரங்கில் நாற்காலிகள் காலியாக இருந்ததால் மாநகர காவல் ஆணையர் கடும் அதிருப்தி அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் போஜராஜன் தெரிவிக்கையில்; காவல்துறையும், அரசும் விநாயகர் சிலை வைக்கக் கூடாது எனவும், சிலை வைப்பதற்கு அனுமதி வாங்க வேண்டும் எனச்சொல்லி அடக்கு முறையில் ஈடுபடுகின்றனர்.

மேலும் விநாயகர் சிலையை வைத்து பணம் பறிக்கும் நோக்கில் உள்ள அமைப்புகளுடன் கூட்டத்தை நடத்துகின்றனர் என குற்றம் சாட்டினர். பாரத நாட்டில் வழிபாடு நடத்த அனுமதி உள்ளது என்ற பட்சத்தில் திருச்சி மாவட்டத்தில் 500 இடங்களில் விநாயகர் சிலை வைப்போம் எனவும், காவல்துறையுடன் அனுமதி பெற மாட்டோம், அதேநேரம் ஒலிபெருக்கி வைப்பதற்கு மட்டும் அனுமதி பெறுவோம் எனத் தெரிவித்தார்.

காவிரியில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியை நண்பகல் 12-யில் இருந்து மாலை 4 மணிக்குள் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என காவல்துறையினர் எங்களை கட்டாயப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், வழக்கம்போல நடைபெறும் முறையை நாங்கள் பின்பற்றுவோம் என தெரிவித்தனர். சிலைகளுக்கு மாநகர காவல் துறை அனுமதிக்காவிட்டாலும் திருச்சி மாவட்டம் முழுவதும் 500 சிலைகளை வைப்போம் என ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.

முன்னதாக அவரை செய்தியாளர்கள் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த பொழுது திருச்சி மாநகர காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் செய்தியாளர்களைப் பிடித்து தள்ளியதால் செய்தியாளர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு காவல்துறையினர் செய்தியாளர்களை சமாதானப்படுத்தி கூட்ட அரங்கிற்கு அழைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன்; அரசு அளித்த கட்டுப்பாடுகள் மட்டுமே தற்போது உள்ளது. கட்டுப்பாடுகள் குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளோம், புதிதாக எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. எத்தனை விநாயகர் சிலைகள், எங்கெங்கு வைக்க அனுமதி கொடுக்கப்படும் என்பது இனிமேல் தான் தெரியவரும்.

கடந்த ஆண்டு 230 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. சட்டத்திற்கு உட்பட்டு வைத்தால் அனுமதி அளிக்கப்படும். இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்திற்கு உட்பட்டு சிலை வைக்க வேண்டும் என்பதே காவல்துறையின் அறிவுரை என்றார்.

காவிரி பாலம் பராமரிப்புக்காக மூடப்போவதாக அறிவித்திருந்தது குறித்தும், பொதுமக்களின் நலன் கருதி இருசக்கர வாகனங்களை பராமரிப்பின்போதும் அனுமதிப்பது குறித்த கேள்விக்கு, இருசக்கர வாகனங்களை அனுமதிப்பது குறித்து, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

வழக்கமான நடைமுறைகளின்படி விநாயகர் சிலைகள் காவிரி பாலத்தில் வைத்தே கரைக்கப்படும் என்பதால் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்த பின்னர் பராமரிப்பு பணிகளுக்காக காவிரி பாலம் மூடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.