சேலம்: சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அம்மாப்பேட்டை வழியாக அயோத்தியாப்பட்டணத்திற்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து சீலநாயக்கன்பட்டி வழியாக அயோத்தியாப்பட்டணத்திற்கு டவுன் பஸ் இயக்கம் இல்லாமல் இருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து குகை, சீலநாயக்கன்பட்டி வழியாக அயோத்தியாப்பட்டணத்திற்கு டவுன் பஸ் இயக்கம் தொடங்கியது.
இதேபோல் சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 5 ரோடு, கந்தம்பட்டி பைபாஸ், திருவாகக்கவுண்டனூர் பைபாஸ், கொண்டலாம்பட்டி ரவுண்டானா, சீலநாயக்கன்பட்டி வழியாக அயோத்தியாப்பட்டணத்திற்கு டவுன் பஸ் இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதனை ஏற்று போக்குவரத்து கழக அதிகாரிகள் சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருவாகக்கவுண்டனூர், சீலநாயக்கன்பட்டி வழியாக அயோத்தியாப்பட்டணத்திற்கு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்த புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் தொடக்க விழா இன்று காலை சேலம் புது பஸ் ஸ்டாண்டில் நடந்தது. ராஜேந்திரன் எம்எல்ஏ புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், பயணிகளின் வசதிக்காக புதிய பஸ் ஸ்டாண்ட்- அயோத்தியாப்பட்டணம் வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்கம் தொடங்கியுள்ளது. இந்த பஸ்சின் வழித்தட எண் 1 ஆகும். இந்த பஸ்சில் மகளிர் பயணம் செய்ய இலவசமாகும், என்றனர்.