விபத்தில் சிதைந்த மூளை, மகனின் 9 உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்: நெகிழ்ச்சி சம்பவம்

சில நேரங்களில் சிலர் செய்யும் அரிய செயல்கள் மூலம் அவர்கள் பலருக்கு உயிர் கொடுத்த தெய்வங்களாக உயர்ந்து விடுகிறார்கள். ஆதரவான ஒரே மகனையும் தாரை வார்த்த பெற்றோர், மூளை சிதைவடைந்த  மகனின் உறுப்புகளை தானம் செய்த சம்பவம் இதற்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டாகும். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழன்மாதேவி கிராமத்தில் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து சில மாதங்கள் ஆகியுள்ளன. மகன் கார்த்தி திருவள்ளூரில் உள்ள நிறுவனத்தில் சுமார் ஒரு ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் கார்த்தி வெளியில் சென்ற போது அவர் எதிர்பாராத விதமாக சாலையில் நின்று கொண்டிருந்த லாரியில் மோதி ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு மூளை சிதைவு ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.

அதை எடுத்து பெற்றோர்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்த ஒரு மகனையும் இழந்து விட்டோமே என கண்ணீர் மல்க அழுது புலம்பினர். மூளை சிதைவு ஏற்பட்ட நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்தால், அவற்றின் மூலம், இன்னும் சிலர் உயிர் வாழ முடியும் என்பதை சிலர் அவர்களுக்கு புரிய வைத்தனர். இதைத் தொடர்ந்து, மனதை திடமாக்கிக்கொண்டு மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர்.

இதனையடுத்து அவரது இதயம், கண்கள், நுரையீரல் உள்ளிட்ட 9 உறுப்புகள் மியாட் மருத்துவமனை மூலம் தானமாக வழங்கப்பட்டது. பின்னர் அரசு மருத்துவர் ஒருவர் உடலுக்கு பிரேத பரி சோதனை செய்தார். அதன் பிறகு பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.  

சோழமாதேவி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட கார்த்தி உடல் கிராம மக்களின் அஞ்சலிக்கு பிறகு சொந்த ஊரில் எரியூட்டப்பட்டது. மகனை விபத்தில் இழந்து தவித்தாலும் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் தொடர்ந்து கார்த்தி உயிரோடு இருப்பதாகவே தாங்கள் கருதுவதாக கூறி பெற்றோர் கதறி அழுதது காண்பவர்களை கண்கலங்க வைத்தது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.