சென்னை: இந்திய ராணுவத்தில் 1 லட்சம் ஜவான்கள் பற்றாக்குறை உள்ளது தெரியவந்துள்ளது. இந்திய ராணுவத்தில் தரைப்படையில் தேவையான வீரர்கள் சீரான இடைவெளியில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், கரோனா காரணமாக கடந்த 2020-21 மற்றும் 2021-22 ஆண்டுகளில் இந்த தேர்வுகள் நடைபெறவில்லை.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் ‘அக்னி வீரர்கள்’ தேர்வு செய்யும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு, அபாயம் மற்றும் சிரமப்படிகளுடன் ஈர்க்கும் வகையிலான மாதாந்திர ஊதியம் முப்படைகளிலும் வழங்கப்படும். 4 ஆண்டு பணிக்காலம் முடிவடைந்ததும், அக்னி வீரர்களுக்கு சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். அதில் அவர்களது பங்களிப்பு மற்றும் வட்டி ஆகியவை அடங்கும்.
அக்னி வீரர்களுக்கு முதலாம் ஆண்டில் மாதாந்திர ஊதியமாக ரூ,30,000 நிர்ணயிக்கப்படும். அக்னி வீரர் தொகுப்பு நிதிக்கு ரூ.9,000 அளிக்கப்படும். எஞ்சிய ரூ.21,000 கையில் கிடைக்கும். 2-ம் ஆண்டில் ரூ.33,000, 3-ம் ஆண்டில் ரூ.36,500, 4-ம் ஆண்டில் ரூ.40,000 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30% பங்களிப்புத் தொகையாகப் பிடிக்கப்படும். எஞ்சிய 70% தொகை வழங்கப்படும்.
ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் அக்னி வீரர்கள் தேர்வு செய்யும் பணியை தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியா ராணுவத்தில் 1 லட்சம் ஜவான்கள் பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பாதுகாப்பு துறை இணை அமைச்சர், இந்திய ராணுவத்தில் 1,08,685 ஜவான்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறியுள்ளார். மேலும், 2017-18ம் ஆண்டில் 50,026 பேர், 2018-19 ம் ஆண்டில் 53,431 பேர், 2019-20ம் ஆண்டில் 80,572 பேர், 2020-21ம் ஆண்டில் 12,091 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.