தேனி: அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ம்தேதி நடந்தது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், “ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும்” என்று தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. இதில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என்று பதற்றத்தில் இரு தரப்பினரும் உள்ளனர். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தார். ஜோதிடம் மற்றும் ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கையுடன் உள்ளவர் ஓ.பன்னீர்செல்வம். இப்போதும் யாரை சந்தித்தாலும் நேரம், காலம், பெயர், ராசி, திசைகளை கணித்து பழகி வருகிறார்.
யாரிடம் பேசுவது, பழகுவது, எந்த திசையில் செல்வது, எந்த பெயருடன் உள்ளவரை சந்திப்பது என அனைத்து செயல்களையும் ஜோதிடம் பார்த்தே செய்கிறார் என பரவலாக பேசப்படுகிறது. நடந்து போவது, உணவருந்துவது, பேசுவது நடப்பது போன்ற எல்லாவற்றிலும் ஜாதக அடிப்படைக்கு தன்னை மாற்றி கொண்டுள்ள இவர், தன் கையெழுத்தையும் சாய்த்து போடுகிறார் என்கின்றனர் உடனிருப்போர். நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வரவேண்டும் என்பதற்காக கடந்த செவ்வாய்கிழமை அவர் யாரையும் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. பெரியகுளம் அருகே உள்ள தனது தோட்டத்திற்கு சென்று காலை முதல் மாலை வரை தனியாக இருந்து அவர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் தனது வீட்டிலேயே கேரள மாந்திரீகர்களை அழைத்து சில விசேஷ பூஜைகள் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. பெரியகுளத்தில் இருந்து இன்று காரில் மதுரை வந்த ஓ.பன்னீர்செல்வம், மதியம் 1.30 மணி விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார். அங்குள்ள கட்சி அலுவலகத்தில், நடந்த சம்பவம் குறித்து, அவரிடம் செய்தியாளர்கள், ‘உங்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கைகளை தலைக்கு மேல் உயர்த்தி பெரிய கும்பிடாக போட்டு விட்டு, பதில் ஏதும் கூறாமல், புன்சிரிப்புடன் சென்று விட்டார்.